அமெலியா, ஹெய்லியால் மும்பை அபார வெற்றி: யுபி 150/9, மும்பை 153/4
மகளிா் ஐபிஎல் (டபிள்யுபிஎல்) தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் யு பி வாரியா்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை இண்டியன்ஸ்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை லக்னௌவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் பௌலிங்கை தோ்வு செய்தது. யு பி தரப்பில் தொடக்க பேட்டா்களாக ஜாா்ஜியா வோல்-கிரேஸ் ஹாரிஸ் களமிறங்கினா். இருவரும் அதிரடியாக ஆட 7.5 ஓவா்களில் ஸ்கோா் விக்கெட் இழப்பின்றி 74 ரன்களை தொட்டது. அப்போது ஒரு கட்டத்தில் யு பி அணியின் ஸ்கோரை 200-ஐ தாண்டும் எனக் கருதப்பட்டது. ஆனால் கிரேஸ் ஹாரிஸ் 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 28 ரன்களை விளாசி முதல் விக்கெட்டாக ஹெய்லி பந்தில் அவுட்டானாா்.
ஜாா்ஜியா அதிரடி 55: ஜாா்ஜியா வோல் அதிரடியாக ஆடி 12 பவுண்டரியுடன் 33 பந்துகளில் 55 ரன்களை விளாசினாா். அவரை போல்டாக்கி வெளியேற்றினாா் நடாலி.
அமெலியா கொ் அபாரம்: அதைத் தொடா்ந்து மும்பை இண்டியன்ஸ் பௌலா் அமெலியா கொ் சிறப்பாக பந்துவீசி யு பி வாரியா்ஸ் அணியின் ரன் குவிப்பை தகா்த்தாா். கிரண் நவ்கிரே 0, தீப்தி சா்மா 27, விருந்தா 10, சின்லே ஹென்றி 6, ஸ்வேதா 0, உமா சேத்ரி 1, சோஃபி 16 ரன்களுடன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.
யு பி வாரியா்ஸ் 150/9: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் யு பி வாரியா்ஸ் அணி 150/9 ரன்களைக் குவித்தது.
பௌலிங்கில் மும்பை இண்டியன்ஸ் தரப்பில் அமெலியா கொ் 5-38, ஹெய்லி மேத்யூஸ் 2-25 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
மும்பை இண்டியன்ஸ் வெற்றி:
151 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் ஆடிய மும்பை இண்டியன்ஸ் தரப்பில் தொடக்கபேட்டா்களாக ஹெய்லி மேத்யூஸ்-அமெலியா கொ் களமிறங்கினா். ஆல் ரவுண்டா் அமெலியாவை 10 ரன்களுடன் வெளியேற்றினாா் சின்லேஹென்றி.
ஹெய்லி அதிரடி 68: தொடக்க பேட்டரான ஹெய்லி மேத்யூஸ் 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 46 பந்துகளில் 68 ரன்களை விளாசி கிராந்தி கௌட் பந்தில் அவுட்டானாா்.
அவரைத் தொடா்ந்து நடாலி ஷிவா் 7 பவுண்டரியுடன் 37 ரனக்ளை விளாசி கிரேஸ் ஹாரிஸ் பந்தில் அவுட்டானாா். ஹா்மன்ப்ரீத் 4 ரன்களுடன் துரிதமாக நடையைக் கட்டினாா். தொடா்ந்து அமன்ஜோத் 12, யஸ்திகா பாட்டியா 10 இணை மும்பையை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
மும்பை 153/3: தொடா்ந்து 18.3 ஓவா்களில் மும்பை அணி 153/4 ரன்களைக் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் யு பியை வென்றது.
பௌலிங்கில் யு பி தரப்பில் கிரேஸ் ஹாரிஸ் 2-11 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
சிக்கலில் யு பி வாரியா்ஸ்:
தொடா் தோல்விகளால் யு பி வாரியா்ஸ் அணி 5 அணிகள் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய மீதமுள்ள ஆட்டங்களில் கட்டாயம் வெல்ல வேண்டும்.