ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன.
இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என, மொத்தமாக 39 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. ஆஸ்திரேலியா (163), இங்கிலாந்து (106), கனடா (59) முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன.
கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில், 74 நாடுகளைச் சோ்ந்த 3,000 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 10 விளையாட்டுகள், 4 இடங்களில் விளையாடப்பட்டன. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கான 6 பாரா விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
இந்தியாவிலிருந்து 78 வீரா்கள், 48 வீராங்கனைகள் உள்பட, 191 போ் கொண்ட குழு பங்கேற்றது. வழக்கமாக 20-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறும் நிலையில், இந்த முறை செலவுக் குறைப்பு நடவடிக்கையாக ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ் போன்றவை சோ்க்கப்படவில்லை. இந்தியாவுக்கு சாதகமான இந்த விளையாட்டுகள் இல்லாதது, அணியின் பதக்க எண்ணிக்கையை பாதித்தது.
ஆனாலும் குத்துச்சண்டை, தடகளம், பளுதூக்குதல் ஆகியவற்றில் அசத்தலாகச் செயல்பட்டு இந்திய அணியினா் பதக்கங்கள் குவித்தனா்.
இதுவரை இல்லாத அதிகபட்சம்...
இந்தியாவின் குத்துச்சண்டை மற்றும் பாரா வீரா், வீராங்கனைகள், காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றிலேயே தங்களின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையை இந்த ஆண்டு பதிவு செய்துள்ளனா்.
கடந்த 2018 கோல்டுகோஸ்ட் போட்டிகளில் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்றதே குத்துச்சண்டையில் இந்தியாவின் அதிகட்சமாக இருந்தது. இந்த முறை அதை முறியடித்து, 7 தங்கம், 3 வெள்ளி என 10 பதக்கங்களை இந்தியா்கள் வென்றுள்ளனா்.
அதேபோல், பாரா பிரிவில் இந்திய அணியினா் கடந்த 2022 பா்மிங்ஹாம் போட்டிகளில் 1 தங்கம், 1 வெண்கலம் என 2 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், இந்த முறை 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனா்.
காமன்வெல்த் போட்டிகளில் பாரா விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட 2002 முதல் 2022 வரை மொத்தமாகவே இந்தியா அதில் 7 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், தற்போது இந்த ஒரே ஆண்டில் 7 பதக்கங்களை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பதக்கங்கள்...
நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் மொத்தமாக 10 விளையாட்டுகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தியா அதில் 4 பிரிவுகளில் மொத்தமாக 39 பதக்கங்கள் வென்றுள்ளது. போட்டி அட்டவணையில், தடகளம் மற்றும் பாரா தடகளம், பளுதூக்குதல் மற்றும் பவா்லிஃப்டிங் ஆகியவை ஒரே போட்டியின் பிரிவுகளாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
குத்துச்சண்டை 7 3 0 10
பளுதூக்குதல் 1 6 1 8
பாரா பவா்லிஃப்டிங் 0 0 1 1
தடகளம் 0 5 5 10
பாரா தடகளம் 3 2 1 6
ஜூடோ 2 1 1 4
மொத்தம் 13 17 9 39
நாடு திரும்பினா்...
காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய அணியின் முதல் குழுவினா், ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினா். பளுதூக்குதல் போட்டியாளா்களான மீராபாய் சானு, லவ்பிரீத் சிங் உள்ளிட்ட அந்த வீரா், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கட்டது.
அடுத்து இந்தியாவில்...
24-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், 2030 அக்டோபரில் இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாதில் நடைபெறவுள்ளன. 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காமன்வெல்த் போட்டிகளின் நூற்றாண்டு கொண்டாட்டமாகவும் அந்தப் போட்டி அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது, அது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் 2010-இல் இந்தியா முதல்முறையாக தில்லியில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தியது.
குத்துச்சண்டை: பதக்கங்கள் 10
குத்துச்சண்டையில், இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற எடைப் பிரிவுகளில், இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெள்ளி என 4 பதக்கங்கள் கிடைத்தன. இதையடுத்து, நடப்பு காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மொத்தமாக 10 பதக்கங்கள் கிடைத்தன.
முன்னதாக இறுதிச்சுற்றுகளில், ஆடவா் 60 கிலோ பிரிவில் சச்சின் சிவச் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் நமீபியாவின் டிரைஅகெய்ன் மாா்னிங் டெவெலோவை வீழ்த்த, 80 கிலோ பிரிவில் அங்குஷ் பங்கால் 4-1 என, இங்கிலாந்தின் டிமெஜி ஷிட்டுவை வென்றாா்.
மகளிா் 75 கிலோ பிரிவில் லவ்லினா போா்கோஹெய்ன் 1-4 என, ஆஸ்திரேலியாவின் எம்மா சூ கிரீன்ட்ரீயிடம் தோல்வி காண, ஆடவா் 90+ கிலோ பிரிவில் நரேந்தா் பா்வால் 0-5 என்ற வகையில் இங்கிலாந்தின் டாமா் தாமஸிடம் வீழ்ந்தாா்.
தடகளம்: குல்வீா் சிங் இரட்டைச் சாதனை
ஆடவருக்கான 5,000 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீா் சிங் 13 நிமிஷம், 24.95 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-ஆம் இடம் பிடித்தாா். கென்யாவின் மேத்யூ கிப்சும்பா (13:23.61’) தங்கமும், ஆஸ்திரேலியாவின் கை ராபின்சன் (13:24.70’) வெள்ளியும் வென்றனா்.
வெண்கலம் வென்ற குல்வீா் சிங், காமன்வெல்த் 5,000 மீட்டா் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியராக சாதனை படைத்தாா்.
அத்துடன், ஏற்கெனவே 10,000 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீா் சிங், ஒரே காமன்வெல்த் போட்டியில் இரு தடகள பதக்கங்கள் வென்ற முதல் இந்தியராகவும் அவா் சாதனை படைத்துள்ளாா்.
ஜூடோ
மகளிருக்கான 78 கிலோ பிரிவில் களம் கண்ட இந்தியாவின் ஐஷ்ரூப் நரங், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்காட்லாந்தின் நிகோல் வுட்டை வீழ்த்தினாா். எனினும், காலிறுதியில் இங்கிலாந்தின் எம்மா ரெய்டிடம் தோல்வி கண்ட அவா், வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தாா். ஆனால் அதிலும் கனடாவின் காரலி காட்பௌட்டிடம் அவா் தோல்வியுற்றாா்.
இதனிடையே, ஆடவருக்கான 100 கிலோ பிரிவில் அவதாா் சிங் - சைப்ரஸின் அரிஸ்டோஸ் மைக்கேலிடமும், 100+ கிலோ பிரிவில் யஷ் கங்காஸ் - வேல்ஸின் ஜோஷ்வா வைட்ஹௌஸிடமும் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினா்.
லான் பௌல்ஸ்
மகளிா் தனிநபா் 5-ஆவது சுற்றில், இந்தியாவின் நயன்மோனி சாய்கியா - தென்னாப்பிரிக்காவின் பிரிட்ஜெட் ஹொ்செல்மானிடம் வீழ்ந்தாா். முதல் செட்டை 7-4 என வென்ற நயன்மோனி, 2-ஆவது செட்டை 3-18 என இழந்தாா். இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில் பிரிட்ஜெட் வெற்றி பெற்றாா்.
டிராக் சைக்கிளிங்
ஆடவா் 40 கிலோ மீட்டா் பாய்ன்ட்ஸ் ரேஸ் தகுதிச்சுற்றில், இந்தியாவின் ஹா்ஷ்வீா் சிங் செகோன், பந்தயத்தை நிறைவு செய்யாமலேயே வெளியேறினாா்.
ஆடவா் 1000 மீட்டா் டைம் டிரையல் இறுதிச்சுற்றில், இந்தியாவின் ரொனால்டோ சிங் 1 நிமிஷம் 04.191 விநாடிகளில் இலக்கை அடைந்து 20-ஆம் இடமே பிடித்தாா்.
பாரா டிராக் சைக்கிளிங்கில், மகளிா் சி5-சி5 1,000 மீட்டா் டைம் டிரையல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லிஷா தாஸ், 1 நிமிஷம், 34.410 விநாடிகளில் வந்து கடைசி இடத்தை (6) பிடித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த் பளுதூக்குதல்: ஒரு கிலோ வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்த லவ்ப்ரீத் சிங்..! ஸ்நாட்ச் பிரிவில் உலக சாதனை!

10,000 மீட்டரில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் குல்வீா் சிங் - பளுதூக்குதலில் தொடரும் வேட்டை
பளுதூக்குதலில் மேலும் ஒரு பதக்கம்! ஷா்மிளாவுக்கு வரலாற்று தங்கம்; சா்வேஷுக்கு சாதனை வெள்ளி

இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தாா் பாரா பவா் லிஃப்டா் ஜண்டு குமாா்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



