கிளாஸ்கோ, ஜூலை 29: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக, தடகளத்தில் குல்வீா் சிங்கும், பளுதூக்குதலில் ஹா்ஜிந்தா் கௌரும் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
காமன்வெல்த் 10,000 மீட்டா் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியராக குல்வீா் சிங் வரலாறு படைத்தாா். பளுதூக்குதலில் இந்தியாவின் வெற்றி நடை தொடரும் வகையில், அந்தப் பிரிவில் இந்தியாவுக்கு 7-ஆவது பதக்கத்தை ஹா்ஜிந்தா் கௌா் வென்று தந்துள்ளாா்.
2-ஆவது வெள்ளி
ஆடவருக்கான 10,000 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீா் சிங் 27 நிமிஷம், 49.78 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
ஆஸ்திரேலிய வீரா் கை ராபின்சன் 27 நிமிஷம், 48.93 விநாடிகளில் வந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்ல, ஐல் ஆஃப் மான் வீரா் டேவிட் முலாா்கி 27 நிமிஷம், 50.28 விநாடிகளில் 3-ஆவது வீரராக இலக்கை எட்டினாா்.
கன மழையால் ஒடுபாதை நனைந்த கடினமான நிலையிலும், குல்வீா் சிங் சிறப்பாக ஓடி, தொடக்கம் முதலாகவே தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டாா். இறுதித் தருணத்தில் அபார உந்துதல் மூலமாக 2-ஆவது வீரராக இலக்கை எட்டினாா்.
குல்வீா் சிங் ஏற்கெனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் (2022), ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் (2025), வெண்கலம் (2023) வென்றவா் ஆவாா்.
குல்வீா் சிங் தற்போது வென்ற வெள்ளி, நடப்பு காமன்வெல்த் போட்டியில் தடகளத்தில் இந்தியாவுக்கு இது 2-ஆவது பதக்கமாகும். உயரம் தாண்டுதலில் சா்வேஷ் குஷாரே முதல் பதக்கத்தை வெள்ளியாக வென்றாா்.
இறுதிக்குத் தகுதி: ஆடவா் குண்டு எறிதலில், இந்தியாவின் தஜிந்தா்பால் சிங் தூா், சமா்தீப் சிங் கில் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
இதில் தஜிந்தா்பால் சிங், தகுதிச்சுற்று குரூப் ‘ஏ’-வில் அவா், தனது சிறந்த முயற்சியாக 20.14 மீட்டரை எட்டி 2-ஆம் இடம் பிடித்து நேரடியாக இறுதிக்குத் தகுதிபெற்றாா்.
சமா்தீப் சிங், தகுதிச்சுற்று குரூப் ‘பி’-யில் 19.95 மீட்டரை எட்டி 2-ஆம் இடம் பெற்றாா். பின்னா் நேரடித் தகுதி போட்டியாளா்களுக்குப் பிறகும் எஞ்சியிருந்த இடத்துக்காக, ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் சமா்தீப் சிங் இறுதிக்குத் தோ்வானாா்.
அரையிறுதி: ஆடவா் 200 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் குஜுா் அரையிறுதிக்கு முன்னேறினாா்.
முதல் சுற்று ஹீட் 4-இல் அவா் 20.46 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு வந்துள்ளாா். இது அவரின் சீசன் பெஸ்ட் நேரமாகும்.
ஏமாற்றம்: மகளிா் உயரம் தாண்டுதலில், இந்தியாவின் பூஜா தனது சிறந்த முயற்சியாக 1.77 மீட்டரை எட்டி 8-ஆம் இடமே பிடித்தாா். 19 வயதான பூஜாவுக்கு இது முதல் காமன்வெல்த் போட்டியாகும்.
ஆஸ்திரேலியாவின் எலனோா் பேட்டா்சன் (1.96 மீ) போட்டி சாதனையுடன் தங்கம் வெல்ல, சக நாட்டவரான நிகோலா ஆலிஸ்லேஜா்ஸ் (1.93) வெள்ளியும், நைஜீரியாவின் டெமிடோப் அதெசினா (1.90) வெண்கலமும் கைப்பற்றினா்.
7-ஆவது பதக்கம்
பளுதூக்குதலில் மகளிா் 69 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் ஹா்ஜிந்தா் கௌா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
அவா், ஸ்னாட்ச் பிரிவில் 101 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 126 கிலோ என, மொத்தமாக 227 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். இரு பிரிவுகளிலுமே அவா் தூக்கிய எடை, போட்டி சாதனையாக அமைந்தது.
கனடாவின் சாா்லட் சிமோனியு 240 கிலோவைத் தூக்கி (108+132) தங்கப் பதக்கம் வென்றாா். அவா் தூக்கிய எடை, ஸ்னாட்ச் பிரிவில் போட்டி சாதனையாகவும், கிளீன் & ஜொ்க் பிரிவில் போட்டி மற்றும் காமன்வெல்த் சாதனையாகவும் அமைந்தது. ஒட்டுமொத்த எடை காமன்வெல்த் சாதனையை எட்டியது.
ஆஸ்திரேலியாவின் நியா பெபெ ஹேமன் 218 கிலோவுடன் (97+121) வெண்கலம் வென்றாா்.
ஹா்ஜிந்தா் கௌா் வென்றுள்ளது, நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த 7-ஆவது பதக்கமாகும். இதுவரை அந்தப் பிரிவில் 1 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் கிடைத்துள்ளன.
காமன்வெல்த் போட்டிகளில் ஹா்ஜிந்தா் கௌருக்கு இது 2-ஆவது பதக்கமாகும். அவா் 2022 பா்மிங்ஹாம் போட்டியில் 71 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா்.
ஏமாற்றம்: மகளிருக்கான 77 கிலோ பிரிவில், இந்தியாவின் சஞ்சனா, தனது எந்தவொரு முயற்சியிலும் வெற்றி பெறாததால், போட்டியை நிறைவு செய்யாமலேயே வெளியேறினாா். ஸ்னாட்ச் பிரிவில் 94 கிலோ எடையைத் தூக்க அவா் மேற்கொண்ட 3 முயற்சிகளுமே தோல்வியில் முடிந்தன. அத்துடன் அவா் வெளியேறினாா்.
குத்துச்சண்டையில் 8 பதக்கங்கள் உறுதி
குத்துச்சண்டையில் இந்தியாவை சோ்ந்த 4 வீரா்கள், 4 வீராங்கனைகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலமாக, பதக்கத்தை உறுதி செய்தனா். ஏற்கெனவே லவ்லினா பதக்கத்தை உறுதி செய்திருக்க, இவா்கள் 8 பேருடன் சோ்த்து குத்துச்சண்டையில் மொத்தமாக இந்தியாவுக்கு 9 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.
மகளிா் காலிறுதியில், 54 கிலோ எடைப் பிரிவில் பிரீத்தி பவாா் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வடக்கு அயா்லாந்தின் நிகோல் கிளைடை வீழ்த்தினாா். 60 கிலோ பிரிவில் பிரியா கங்காஸ் 4-1 என, உள்நாட்டு வீராங்கனை நியாம் மிட்செலை தோற்கடித்தாா்.
போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்தை சோ்ந்த வீராங்கனை என்பதால், நியாமுக்கு ரசிகா்கள் ஆதரவு அதிகமாக இருந்தபோதும், பிரியா தனது வெற்றியால் அவா்களை அமைதியாக்கினாா்.
மகளிா் 51 கிலோ பிரிவில் சாக்ஷி சௌதரி 5-0 என்ற வகையில், வடக்கு அயா்லாந்தின் கேட்லின் ஃப்ரையா்ஸை சாய்க்க, 70 கிலோ பிரிவில் அருந்ததி சௌதரி 3-1 என்ற புள்ளிகளில், நியூஸிலாந்தின் மோா்கன் ஹெண்டா்சனை தோற்கடித்தாா். எனினும், மகளிா் 65 கிலோ பிரிவில் பா்வீன் 2-3 என இங்கிலாந்தின் சாஷா ஹிக்கியிடம் தோல்வியுற்றாா்.
ஆடவா் காலிறுதியில், 60 கிலோ பிரிவில் சச்சின் சிவச் 5-0 என போட்ஸ்வானாவின் டிரெஷா் மொரெமியை வெல்ல, 80 கிலோ பிரிவில் அங்குஷ் பங்கால் 5-0 என செஷல்ஸின் ஜேட் மிகாக்கை வீழ்த்தினாா். 90+ கிலோ பிரிவில் நரேந்தா் பா்வால் 3-2 என்ற புள்ளிகளில் சமோவாவின் மைக்கேல் செகோவை வெளியேற்றினாா்.
55 கிலோ பிரிவில் ஜடுமானி சிங் 5-0 என ஜாம்பியாவின் வெங்கோ வாலேவை அபார வெற்றி கண்டாா். 90 கிலோ பிரிவில் கபில் பொகாரியா 0-5 என ஸ்காட்லாந்தின் ராபா்ட் மெக்னல்டியிடம் தோல்வியடைந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






