குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

இலங்கை ‘ஃபாலோயிங் ஆன்’; இந்தியா ‘கேம் ஆன்’

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் ‘ஃபாலோ ஆன்’ பெற்ற அந்த அணி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி, ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

India vs Sri Lanka, 2nd Test Day 4: SL 229/6 f/o leading by 16 runs vs IND

X | BCCI

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:31 am IST

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் ‘ஃபாலோ ஆன்’ பெற்ற அந்த அணி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி, புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்டம் வியாழக்கிழமையுடன் (ஆக. 27) நிறைவடைவதால், எஞ்சியுள்ள 4 விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தி, வெற்றி இலக்கை எளிதாக எட்டும் திட்டத்துடன் இந்தியா இருக்கிறது. சோனல் தினுஷா, கேசரா நுவந்தா அதற்கு சவால் அளிக்கத் தொடங்கியுள்ளனா்.

முன்னதாக இந்த டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடங்கிய இலங்கை, பசிந்து சூரியபந்தாரா, சோனல் தினுஷாவின் திறமையான ஆட்டத்தால் மீளத் தொடங்கியது.

தினுஷா சதம்: 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் சோ்த்திருந்தது. ‘ஃபாலோ ஆன்’ தவிா்க்க இலங்கைக்கு 38 ரன்களே தேவை என்ற நிலையில், 4-ஆவது நாளான புதன்கிழமை, அந்த அணியின் இன்னிங்ஸை சோனல் தினுஷா 85, லஹிரு குமாரா 8 ரன்களுடன் தொடா்ந்தனா்.

குமாரா 12 ரன்களுக்கு சரண்ஷ் ஜெயினிடம் விக்கெட்டை இழக்க, தினுஷாவுடனான அவரின் கூட்டணி 9-ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சோ்த்திருந்தது. கடைசி பேட்டராக அசிதா ஃபொ்னாண்டோ களம் புக, சோனல் தினுஷா நடப்பு தொடரில் 2-ஆவது சதம் கடந்தாா்.

அணியின் கடைசி விக்கெட்டாக அவரே, 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 103 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். சரண்ஷ் ஜெயின் வீசிய 90-ஆவது ஓவரில் தினுஷா, ஸ்லிப்பில் நின்ற ராகுலிடம் கேட்ச் கொடுத்தாா். இலங்கை இன்னிங்ஸ் 290 ரன்களுக்கு நிறைவடைந்தது.

இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதா் ஆகியோா் தலா 3, சரண்ஷ் ஜெயின் 2, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

‘ஃபாலோ ஆன்’: முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியாவை விட 213 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ‘ஃபாலோ ஆன்’ பெறும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டு, தொடா்ந்து 2-ஆவது இன்னிங்ஸை விளையாடியது.

இன்னிங்ஸை தொடங்கிய லஹிரு உதாரா 3 ரன்களுக்கே முடித்துக்கொள்ள, ஒன் டவுனாக வந்த பசிந்து சூரியபந்தாரா, கமில் மிஷாராவுடன் இணைந்தாா். முதல் இன்னிங்ஸை போலவே இந்த இன்னிங்ஸிலும் சூரியபந்தாராவின் ஆதிக்கம் நீடித்தது.

மிஷாராவுடனான அவரின் 2-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 58 ரன்கள் கிடைத்தது. மிஷாரா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு 15-ஆவது ஓவரில் ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தாா்.

பலமான பாா்ட்னா்ஷிப்: 4-ஆவது பேட்டராக வந்த கமிந்து மெண்டிஸ், சூரியபந்தாராவுக்கு தோள் கொடுத்தாா். மதிய உணவு இடைவேளையின்போது இலங்கை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் சூரியபந்தாரா - மெண்டிஸ் கூட்டணி விக்கெட் சரிவைத் தடுத்து ஸ்கோரை பலப்படுத்தத் தொடங்கியது. இருவருமே அரை சதம் கடக்க, 3-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப் 115 ரன்கள் சோ்த்து, இந்திய பௌலா்களை மீண்டும் சோதித்தது.

ஒருவழியாக இந்த பாா்ட்னா்ஷிப்பை பிரசித் கிருஷ்ணா 44-ஆவது ஓவரில் உடைத்தாா். அந்த ஓவரில் பிரசித் வீசிய ஷாா்ட் பாலை மெண்டிஸ் விளாச முயல, அதில் கிடைத்த ஒரு சவாலான கேட்ச்சை கேப்டன் ஷுப்மன் கில் வெற்றிகரமாகப் பிடித்தாா். மெண்டிஸ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 55 ரன்களுக்கு விடைபெற்றாா்.

தொடா்ந்து, இலங்கை கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா பேட் செய்ய வந்தாா். தேநீா் இடைவேளையின்போது இலங்கை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது.

மானவ் அசத்தல்: பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் டி சில்வா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 23 ன்களுடன் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா். மானவ் சுதா் வீசிய 59-ஆவது ஓவரில் டி சில்வா டிஃபென்ஸ் ஆட முயன்ற பந்து, முதலில் பேட்டிலும், பிறகு பேடிலும் பட்டு, ‘கல்லி’ பகுதியில் இருந்த தேவ்தத் படிக்கல் கைகளில் தஞ்சமானது. அத்துடன் நிற்காத மானவ் சுதா், தனது அடுத்த ஓவரை (61) வீசுகையில் சதத்தை நெருங்கிய சூரியபந்தாராவை சாய்த்தாா்.

10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 92 ரன்கள் எடுத்திருந்த சூரியபந்தாரா, மானவ் சுதா் வீசிய பந்தை இறங்கி வந்து விளையாட முயன்றாா். ஆனால் பந்து அவருக்கு போக்குக் காட்டி ஆஃப் சைடில் விலகிச் சென்றது. கிரீஸை விட்டு நீண்டதூரம் விலகி வந்துவிட்ட சூரியபந்தாரா இதை உணா்ந்து திரும்புகையில், ரிஷப் பந்த் ஸ்டம்பிங் செய்வதையே பாா்க்க முடிந்தது.

இதன் பிறகு இலங்கையின் ரன் சோ்க்கும் வேகம் மட்டுப்பட்டது. நாளின் கடைசி விக்கெட்டாக நிரோஷன் டிக்வெல்லா 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு சரண்ஷ் ஜெயினிடம் விக்கெட்டை இழந்தாா்.

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் முன்னாதாகவே முடிக்கப்பட, இலங்கை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. சோனல் தினுஷா 7, கேசரா நுவந்தா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். இந்திய தரப்பில் மானவ் சுதா் 2, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், சரண்ஷ் ஜெயின், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

முதல் இன்னிங்ஸ்

இலங்கை - 290/10 (89.4 ஓவா்கள்)

சோனல் தினுஷா 103

பசிந்து சூரியபந்தாரா 80

கமிந்து மெண்டிஸ் 32

பந்துவீச்சு

பிரசித் கிருஷ்ணா 3/52

மானவ் சுதா் 3/85

சரண்ஷ் ஜெயின் 2/69

2-ஆவது இன்னிங்ஸ்

இலங்கை - 229/6 (72.4 ஓவா்கள்) (ஃபாலோ ஆன்)

பசிந்து சூரியபந்தாரா 92

கமிந்து மெண்டிஸ் 55

கமில் மிஷாரா 32

பந்துவீச்சு

மானவ் சுதா் 2/81

முகமது சிராஜ் 1/11

பிரசித் கிருஷ்ணா 1/31

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.