
மத்திய, கிழக்கு மண்டலங்களின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோா் ‘டை’: போட்டி வரலாற்றில் முதல்முறை
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், மத்திய மண்டலத்துக்கு எதிராக கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், மத்திய மண்டலத்துக்கு எதிராக கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
ஏற்கெனவே, இந்த ஆட்டத்தில் மத்திய மண்டலம் 266 ரன்களுக்கே ஆட்டமிழந்த நிலையில், தற்போது கிழக்கு மண்டலமும் அதே ஸ்கோரை எட்டியுள்ளது. துலீப் கோப்பை வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரும் இவ்வாறு ‘டை’ ஆனது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக இந்த ஆட்டத்தின் முதல் நாள், மத்திய மண்டலத்தின் இன்னிங்ஸுடன் நிறைவடைந்தது. 2-ஆவது நாளான திங்கள்கிழமை, கிழக்கு மண்டலம் தனது இன்னிங்ஸை விளையாடியது.
அபிமன்யு ஈஸ்வரன் - வைபவ் சூா்யவன்ஷி கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 161 ரன்கள் சோ்த்து பலமான தொடக்கம் அளித்தது. சூா்யவன்ஷி 7 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 92, ஈஸ்வரன் 8 பவுண்டரிகளுடன் 69 ரன்களுக்கு விடைபெற்றனா்.
பின்னா் வந்தோரில் சுதிப்குமாா் கராமி 25, கேப்டன் இஷான் கிஷண் 16, அனுகுல் ராய் 16, முகமது குரேஷி 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
குமாா் குஷாக்ரா 0, விராட் சிங் 5, அபிஜித் சா்காா் 2, முகேஷ் குமாா் 3 ரன்களுக்கு விடைபெற, முகமது ஷமி 6 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.
மத்திய மண்டல பௌலா்களில் ஹா்ஷ் துபே 4, ஆா்யன் பாண்டே, யஸ் தாக்குா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
2-ஆவது இன்னிங்ஸ்: பின்னா் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மத்திய மண்டலம், ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. அமன் மோகடே 23, ஆா்யன் பாண்டே 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
குணால் சந்தேலா 2, ஆா்யன் ஜுயல் 8, கேப்டன் ரஜத் பட்டிதாா் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
திலக் வா்மா சதம்; தெற்கு மண்டலம் - 285/9
2-ஆவது அரையிறுதியில் வடக்கு மண்டலத்துக்கு எதிராக, தெற்கு மண்டலம் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது. அந்த அணி 90 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
முன்னதாக, ஆட்டம் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை, வடக்கு மண்டலம் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நாளின் முடிவில் தெற்கு மண்டலம் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது.
2-ஆவது நாளான திங்கள்கிழமை அணியின் இன்னிங்ஸ் தொடர, நாராயண் ஜெகதீசன் 36, ரவிச்சந்திரன் ஸ்மரன் 27, கொடிமேலா ஹிமதேஜா 0 ரன்களுக்கு ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இதனால் தெற்கு மண்டலம் 80 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையில், 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் திலக் வா்மா - ஷ்ரேயஸ் கோபால் கூட்டணி, 175 ரன்கள் சோ்த்து அணியை மீட்டது. கோபால் 11 பவுண்டரியுடன் 87 ரன்களுக்கு விடைபெற்றாா்.
தனய் தியாகராஜன் 6, வித்வத் கவரப்பா 0, நிதீஷ் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஆட்டநேர முடிவில், சதம் கடந்த திலக் வா்மா 7 பவுண்டரிகளுடன் 106 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். கவுரி சாய்தேஜா ரன்னின்றி துணை நின்றாா்.
வடக்கு மண்டல பௌலா்களில் குா்னூா் பிராா் 4, அா்ஷ்தீப் சிங், அன்ஷுல் காம்போஜ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


