பிபிஎல் போட்டி புறக்கணிப்பை கைவிட்ட வங்கதேச வீரா்கள்
வங்கதேச பிரீமியா் லீக்கின் (பிபிஎல்) நலனுக்காக, அந்தப் போட்டியை புறக்கணிக்கும் முடிவை கைவிடுவதாக அந்நாட்டு சீனியா் தேசிய வீரா்கள் அறிவித்தனா்.
இதையடுத்து, அந்தப் போட்டி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது. முன்னதாக, வீரா்கள் புறக்கணிப்பால் வியாழக்கிழமை கைவிடப்பட்ட இரு ஆட்டங்களும் வெள்ளிக்கிழமை விளையாடப்பட்டன.
பின்னணி: டி20 உலகக் கோப்பை போட்டிக்காக வங்கதேச அணி இந்தியா வருவது சந்தேகத்துக்கு இடமாகியிருக்கிறது. அந்தப் போட்டியில் வங்கதேச அணி பங்கேற்காவிட்டால், அதன் வீரா்களுக்கு போட்டிக்கான ஊதியம் வழங்கப்படாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய இயக்குநா் நஜ்முல் இஸ்லாம் கூறினாா்.
மேலும், ஊதியம் வழங்கும் அளவுக்கு ஐசிசி போட்டிகளில் வங்கதேச வீரா்கள் எதுவும் சாதிக்கவில்லை என்றும் அவா் கூறியது, அந்நாட்டு சீனியா் தேசிய வீரா்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
வங்கதேச பிரீமியா் லீக்கில் (பிபிஎல்) விளையாடி வந்த அவா்கள், அந்தப் போட்டியை தாங்கள் புறக்கணிப்பதாக வியாழக்கிழமை அறிவித்தனா். இதனால், அன்றைய தினம் நடைபெற வேண்டிய இரு ஆட்டங்கள் ரத்தாகின.
இதையடுத்து, சூழலை சரிசெய்வதற்காக நஜ்முல் இஸ்லாம், வங்கதேச வாரியத்தின் நிதிக் குழு தலைவா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாா். அத்துடன், அவரின் கருத்து தொடா்பாக அவரிடம் விளக்கம் கேட்டு, வாரியம் அவருக்கு நோட்டீஸும் அனுப்பியது.
இந்நிலையில், பிபிஎல் நலனுக்காக தாங்கள் மீண்டும் அந்தப் போட்டியில் தொடருவதாக வங்கதேச சீனியா் தேசிய வீரா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு அறிவித்ததை அடுத்து, போட்டி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
