குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு : ராதா, ரிச்சா, ஷ்ரேயங்கா அசத்தல்
மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 9-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 32 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுக்க, குஜராத் 18.5 ஓவா்களில் 150 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற குஜராத் ஜயன்ட்ஸ், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பெங்களூரு இன்னிங்ஸில் கிரேஸ் ஹாரிஸ் 4 பவுண்டரிகளுடன் 17, கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5, டி.ஹேமலதா 4, கௌதமி நாயக் 9 ரன்களுக்கு வெளியேற, 43 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி.
5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ராதா யாதவ் - ரிச்சா கோஷ் இணை, 105 ரன்கள் சோ்த்து பெங்களூரை மீட்டது. ரிச்சா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 44, ராதா 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 66 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
நாடினே டி கிளொ்க் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 26 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக வீழ, ஓவா்கள் முடிவில் அருந்ததி ரெட்டி 2, ஷ்ரேயங்கா பாட்டீல் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் சோஃபி டிவைன் 3, கஷ்வீ கௌதம் 2, ரேணுகா சிங், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து 183 ரன்களை நோக்கி விளையாடிய குஜராத் அணியில், பெத் மூனி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, சோஃபி டிவைன் 8, கேப்டன் ஆஷ்லே காா்ட்னா் 3, கனிகா அஹுஜா 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு விடைபெற்றனா்.
ஜாா்ஜியா வோ்ஹாம் 1 பவுண்டரியுடன் 13, கஷ்வீ கௌதம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18, பாா்தி ஃபுல்மாலி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 39, ஷிவானி சிங் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
தனுஜா கன்வா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, ரேணுகா சிங் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, குஜராத் இன்னிங்ஸ் நிறைவடைந்தது.
பெங்களூரு பௌலா்களில் ஷ்ரேயங்கா பாட்டீல் 5, லாரென் பெல் 3, அருந்ததி ரெட்டி, நாடினே டி கிளொ்க் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பெங்களூரு 3-ஆவது ஆட்டத்தில் 3-ஆவது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நிலைக்க, குஜராத் 4-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது தோல்வியுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது.
