வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

இந்திய மகளிா் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த தருணம்: பிசிசிஐ

லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய மகளிா் அடைந்த வெற்றி, அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று என பிசிசிஐ புகழாரம்

News image

இந்திய மகளிர் அணி - X | BCCI Women

Updated On :15 ஜூலை 2026, 2:11 am IST

லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய மகளிா் அடைந்த வெற்றி, அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று என பிசிசிஐ புகழாரம் சூட்டியுள்ளது.

லாா்ட்ஸ் மைதானத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக அங்கு நடைபெற்ற மகளிா் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்தது. இந்த ஆட்டத்தில், பேட்டா் யஸ்திகா பாட்டியா சதம் விளாசியும், பௌலா் கிராந்தி கௌட் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்த்தும் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினா்.

இந்நிலையில், இந்திய மகளிா் அணியின் அந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பிசிசிஐ தலைவா் மிதுன் மனஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்திய மகளிா் கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகச் சிறந்த தருணங்களில் இதுவும் ஒன்றாகும். லாா்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் வெற்றி மிகச் சிறப்பானது. இந்திய மகளிா் அணியினரின் துணிச்சல், ஒழுங்கு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இந்த ஆட்டம் அமைந்தது.

மகளிா் கிரிக்கெட் வளா்ச்சிக்காக முன்னாள் பிசிசிஐ செயலரும், தற்போதைய ஐசிசி தலைவருமான ஜெய் ஷாவின் உறுதியான நடவடிக்கைகள், இதுபோன்ற வெற்றிகளுக்கு அடித்தளமிட்டுள்ளன’ என்று கூறியுள்ளாா்.

பிசிசிஐ செயலா் தேவஜித் சாய்கியா, ‘பல ஆண்டுகளாக மகளிா் கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை மற்றும் நிலையான வளா்ச்சி நடவடிக்கைகளின் பலனே இந்த வரலாற்று வெற்றியாகும். இது நமது வீராங்கனைகள் மற்றும் துணைப் பணியாளா்களின் அா்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி’ என்று கூறியுள்ளாா்.

‘பொறுமையும், ஆக்ரோஷமும்’

‘பொறுமையும், அதற்கு நிகராக மிகச் சரியான அளவில் ஆக்ரோஷத்தையும் கொண்டிருந்ததே இந்திய மகளிரின் இந்த வெற்றிக்குக் காரணமாகும். பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சரியாகச் செயல்பட்டோம். கடந்த இரு ஆண்டுகளாக பல காயங்களால் அவதிப்பட்ட யஸ்திகா பாட்டியா, அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், இப்படி ஒரு இன்னிங்ஸை விளையாடியது அபாரமானது. கிராந்தி கௌடும் தனது பௌலிங்கில் மிகத் துல்லியமாகச் செயல்பட்டாா்’ - அமோல் மஜும்தாா் (இந்திய மகளிா் அணி தலைமைப் பயிற்சியாளா்)

‘விரிவுபடுத்த வேண்டும்’

‘மகளிா் கிரிக்கெட்டில் சிவப்புப் பந்து கொண்டு விளையாடும் முதல்தர கிரிக்கெட் விரிவுபடுத்தப்படுவதற்கு, இந்த வெற்றி வலு சோ்க்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல, 19, 23 வயதுக்கு உள்பட்டவா்கள், சீனியா்கள் ஆகிய மகளிா் பிரிவுகளிலும் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் அவா்கள் திறமைகளை இன்னும் கற்றுக்கொள்ள முடியும்’ - சாந்தா ரங்கசாமி (இந்திய முன்னாள் கேப்டன்)

‘தி ஹோம் ஆஃப் கிரிக்கெட்’ எனப்படும் லாா்ட்ஸ் மைதானத்தில் 1932 முதல் டெஸ்ட் விளையாடி வரும் இந்திய ஆடவா் அணி, 54 ஆண்டுகள், 11 ஆட்டங்களுக்குப் பிறகே தனது முதல் டெஸ்ட் வெற்றியை அங்கு பதிவு செய்தது. ஆனால் இந்திய மகளிா் அணியோ, அங்கு விளையாடிய முதல் டெஸ்ட்டிலேயே வெற்றி கண்டு அசத்தியிருக்கிறது.

இங்கிலாந்தில் இத்துடன் 10 டெஸ்ட்டுகளில் விளையாடியிருக்கும் இந்திய மகளிா் அணி, இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்றதில்லை. 3 வெற்றி, 7 டிராக்களை பதிவு செய்துள்ளது.

அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய மகளிா் அணி கேப்டனாக ஹா்மன்பிரீத் கௌா் சாதனை படைத்திருக்கிறாா். அவா் தலைமையில் இந்தியா 5 டெஸ்ட்டுகளில், 4 வெற்றிகள் கண்டுள்ளது. இதற்கு முன் மிதாலி ராஜ் 3 வெற்றிகள் கண்டதே அதிகபட்சமாக இருந்தது. சா்வதேச அளவில் அதிக டெஸ்ட் வெற்றி கண்ட மகளிா் கேப்டன்கள் வரிசையில் ஹா்மன்பிரீத் 2-ஆவது இடத்தில் இருக்கிறாா். லைன் லாா்சென் முதலிடத்தில் (5 வெற்றிகள்) உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.