டி20 உலகக் கோப்பை போரடிப்பது ஏன்?

பனிப்பொழிவுப் பிரச்னையால் ஆட்ட முடிவு முன்பே தெரிந்துவிடுகிறது...
இலங்கையை வென்ற ஆஸி. அணி
இலங்கையை வென்ற ஆஸி. அணி

டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கி இன்றுடன் ஒருவாரம் ஆகப்போகிறது.

பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியடைந்தபோது நம் மக்களிடையே ஒரு பரபரப்பு, விவாதம், சர்ச்சை ஏற்பட்டது. மற்றபடி ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது இருந்த ஒரு உற்சாகம் கூட டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஏற்படவில்லை.

எல்லாப் பெரிய அணிகளும் விளையாடுகின்றன. பிரபல வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் உள்ளார்கள். ஆனாலும் போட்டி இன்னும் சுறுசுறுப்பை எட்டவில்லை. உலகக் கோப்பைப் போட்டி என்றால் ரசிகர்களைக் காந்தம் போல கவர்ந்திழுக்க வேண்டாமா? 

சூப்பர் 12 ஆட்டங்கள் அக்டோபர் 23 முதல் தொடங்கின. முதல்நாளே இரண்டு ஆட்டங்கள். ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்காவும் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளும் மோதின. 

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம் பரபரப்பாகத்தான் இருந்தது. கடைசிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இதனால் டி20 உலகக் கோப்பையில் தீப்பொறி பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

2016 டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இந்தமுறை முதல் ஆட்டத்திலேயே மோதியபோது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த ஆட்டம் துளி கூட சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை. மே.இ. தீவுகள் அணி 14.2 ஓவர்களில் 55 ரன்களுக்குள் சுருண்டது. அந்த இலக்கை 8.2 ஓவர்களுக்குள் அடைந்தது இங்கிலாந்து. மொத்த ஆட்டமும் 23 ஓவர்களுக்குக் கூட நிலைக்கவில்லை. இதற்காகவா நாம் டி20 ஆட்டத்தைப் பார்க்கிறோம்?

ஞாயிறன்று நடைபெற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான் இந்தியாவையும் இலங்கை வங்கதேசத்தையும் சுலபமாக வென்றன. வங்கதேசம் அளித்த சற்று கடினமான இலக்கை அபாரமாக விளையாடி வென்றது இலங்கை. 79 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தாலும் பிறகு ஜோடி சேர்ந்த சரித் அசலங்காவும் பனுகாவும் அட்டகாசமாக விளையாடி கவனம் ஈர்த்தார்கள். இந்த ஆட்டம் ஓரளவு சுவாரசியமாகவே இருந்தது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை எளிதாக வென்று காண்பித்தது பாகிஸ்தான். 

கெயில்
கெயில்

இதன்பிறகு நடைபெற்ற ஆறு ஆட்டங்களில் ஓர் ஆட்டம் மட்டுமே கடைசி ஓவர் வரை சென்றது. அதிகம் கவனம் ஈர்க்காத ஸ்காட்லாந்து - நமீபியா ஆட்டத்தில் 110 என்கிற இலக்கை 6 விக்கெட்டுகளை இழந்து 19.1 ஓவர்களில் வென்றது நமீபியா. நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - இலங்கை ஆட்டத்திலும் இலக்கை 17 ஓவர்களில் அடைந்தது ஆஸ்திரேலியா.

ரசிகர்கள் எதற்காக டி20 ஆட்டத்தைப் பார்க்கிறார்கள்? அதிக சிக்ஸர்கள், கடைசி ஓவரில் பரபரப்பு. இவைதானே? 

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆடுகளங்களில் பல பேட்டர்கள் திணறுவதால் அதிரடி ஆட்டம் எல்லா நேரமும் அமைவதில்லை. கடைசி ஓவர் வரை இதுவரை இரு ஆட்டங்கள் மட்டுமே சென்றுள்ளன. கடைசிப் பந்து வரை இதுவரை ஓர் ஆட்டமும் செல்லவில்லை. 

ஒரு டி20 உலகக் கோப்பைப் போட்டி இப்படியிருந்தால் ரசிகர்களுக்கு ஆர்வம் எப்படி ஏற்படும்?

இதைவிட முக்கியப் பிரச்னை. டாஸ் வென்றால் ஆட்டத்தில் வெற்றி உறுதி என்கிற மோசமான நிலை இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. அதிலும் இரவு ஆட்டங்களில் 2-வதாகப் பந்துவீசினால் பனிப்பொழிவினால் பந்துவீச்சாளர்களுக்குச் சிக்கல் ஏற்படும் என, டாஸ் வெல்லும் கேப்டன்கள், முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்கிறார்கள். இதனால் 2-வதாக பேட்டிங் செய்து இலக்கை எளிதாக அடைகிறார்கள். ஸ்காட்லாந்து - ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் மட்டும் இலக்கை விரட்டிய ஸ்காட்லாந்து தோல்வியடைந்தது. 

சூப்பர் 12 ஆட்டங்களில் இலக்கை விரட்டிய அணிகளுக்குக் கிடைத்த முடிவுகள்

வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி, தோல்வி (ஸ்காட்லாந்து - ஆப்கானிஸ்தான்), வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி

பனிப்பொழிவுப் பிரச்னையால் 2-வதாக பேட்டிங் செய்யும் அணிகள் எந்த இலக்காக இருந்தாலும் அதை எப்படியாவது அடைந்து விடுவதால் ஆட்ட முடிவு முன்பே தெரிந்துவிடுகிறது. மேலும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய குட்டி அணிகளால் பெரிய அணிகளுக்குச் சமமாக ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டி மேலும் சுவாரசியமற்றதாகி விடுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் தீப்பொறி ஆட்டமும் பரபரப்பு முடிவும் எப்போது அமைகிறதோ அப்போது டி20 உலகக் கோப்பைப் போட்டியை மக்கள் அள்ளிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அந்த நிலை விரைவில் அமையட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com