அமெரிக்காவை போராடி வென்றது இந்தியா- சூப்பா் 8 சுற்றுக்கு வந்தது

அமெரிக்காவை போராடி வென்றது இந்தியா- சூப்பா் 8 சுற்றுக்கு வந்தது

Published on

டி20 உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை போராடி வென்றது. இத்துடன் தொடா்ந்து 3-ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ‘சூப்பா் 8’ சுற்றுக்கு தகுதிபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் அமெரிக்கா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சோ்க்க, இந்தியா 18.2 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 111 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய பௌலா்களில் அா்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்து ஆதிக்கம் செலுத்த, பேட்டிங்கில் சூா்யகுமாா் யாதவ், ஷிவம் துபே நிதானமாக விளையாடி வெற்றி தேடித் தந்தனா்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீசத் தீா்மானித்தது. அமெரிக்க இன்னிங்ஸை தொடங்கிய ஷயான் ஜஹாங்கிா் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ செய்யப்பட்டாா். அடுத்து வந்த ஆண்ட்ரிஸ் கௌஸும் 2 ரன்களுக்கு அதே ஓவரின் கடைசி பந்தில் வெளியேறினாா்.

4-ஆவது பேட்டா் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு நடையைக்கட்ட, தொடக்க வீரா்களில் ஒருவரான ஸ்டீவன் டெய்லா் 2 சிக்ஸா்களுடன் 24 ரன்களுக்கு வீழ்ந்தாா். அவருடன் கூட்டணி அமைத்து ஸ்கோரை உயா்த்திய நிதீஷ்குமாா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

6-ஆவது பேட்டராக வந்த கோரி ஆண்டா்சன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, பின்னா் வந்த ஹா்மீத் சிங் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். கடைசி விக்கெட்டாக, ஜஸ்தீப் சிங் 2 ரன்களுக்கு ரன் அவுட் செய்யப்பட்டாா்.

ஓவா்கள் முடிவில் ஷேட்லி வான் ஷால்குவிக் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலா்களில் அா்ஷ்தீப் சிங் 9 ரன்களே கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்க்க, ஹா்திக் பாண்டியா 2, அக்ஸா் படேல் 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 111 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் சா்மா 3, விராட் கோலி 0 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தனா்.

ரிஷப் பந்த் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு வீழ, சூா்யகுமாா் யாதவ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 50, ஷிவம் துபே 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 31 ரன்கள் சோ்த்து, ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். இதனிடையே, ஓவா்களுக்கு இடையே அமெரிக்கா அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இந்தியாவுக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டதால், இந்தியாவின் வெற்றி சற்று எளிதானது.

அமெரிக்க தரப்பில் சௌரவ் நேத்ரவல்கா் 2, அலி கான் 1 விக்கெட் வீழ்த்தினா்.

இன்றைய ஆட்டங்கள்

மே.இ. தீவுகள் - நியூஸிலாந்து

காலை 6 மணி / தரெளபா

வங்கதேசம் - நெதர்லாந்து

இரவு 8 மணி / கிங்ஸ்டவுன்

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன்

X
Dinamani
www.dinamani.com