ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தனுஷ்கோடி தடம் மாறி 45 ஆண்டுகள் நிறைவு

படம்-1: தனுஷ்கோடி கடற்கரையில் 1954ல் நடைபெற்ற காந்தி ஜெயந்தி ஊர்வலம். படம்-2: தனுஷ்கோடி யூனியன் அலுவலக தெருவில் கடலின் ஆக்கிரமிப்பு. படம்-3: தற்போது தனுஷ்கோடியில் காணப்படும் கடலால் சிதைந்து போன கிறிஸ்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:42 am

எஸ்.வி.எஸ்.ஜெக​ஜோதி.

படம்-1: தனுஷ்கோடி கடற்கரையில் 1954ல் நடைபெற்ற காந்தி ஜெயந்தி ஊர்வலம்.



படம்-2: தனுஷ்கோடி யூனியன் அலுவலக தெருவில் கடலின் ஆக்கிரமிப்பு.



படம்-3: தற்போது தனுஷ்கோடியில் காணப்படும் கடலால் சிதைந்து போன கிறிஸ்தவ தேவாலயம்.

ராமநாதபுரம், டிச. 22: ராமேசுவரம் தீவின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. ராவணனை வதம் செய்த பிறகு ஸ்ரீராமர் சீதாதேவி, லெட்சுமணன், அனுமன் மற்றும் வானரப் படைகளுடன் தனுஷ்கோடி வழியாக ராமேசுவரம் வந்தார். வரும் வழியில் ஸ்ரீராமர் சீதாபிராட்டியிடம் இரு கடல்களும் சங்கமிக்கும் இந்த இடம் உலகிலேயே புனிதமானது என்றும் இங்கு தீர்த்தமாடினால் நமது ஊழ்வினைப்பயன் மட்டுமல்லாது, நமது மூதாதையர்களின் பாவங்களும் தீரும் என்றும் தனுஷ்கோடியின் பெருமைகளைப் பற்றிக் கூறினாராம். வங்காள விரிகுடா கடலும் இந்து மகா சமுத்திரமும் கூடும் இடமே தனுஷ்கோடி.

தனுஷ் என்றால் வில் என்றும் கோடி என்றால் முனை என்றும் அர்த்தமாகும். தனுஷ்கோடி என்றால் வில்லின் முனை என்றும் பொருள்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டிஷாரின் முக்கியத்

துறைமுக நகராகவும் தனுஷ்கோடி விளங்கியது. தனுஷ்கோடிக்கும் இலங்கை தலை மன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க விரும்பிய பிரிட்டிஷார் 1911 ஆம் ஆண்டு தனுஷ்கோடியிலும் தலைமன்னாரிலும் ஒரேமாதிரியான துறைமுகங்களைத் துவக்கினார்கள். 1914 ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதியிலிருந்து கப்பல் போக்குவரத்து துவங்கியது. இர்வின்,கோஹின் என்ற இரு கப்பல்கள் தமது பயணத்தைத் துவக்கின. சென்னையிலிருந்து இந்தோ-சிலோன் போட் மெயில் மூலம் தனுஷ்கோடி வரும் பயணிகள் அங்குள்ள துறைமுகத்தில் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும் இர்வின்,

கோஹின் கப்பல்கள் மூலம் தலைமன்னார் சென்றடைந்தனர். பின்னர் தலைமன்னார் துறைமுகத்தில் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும் ரயில் மூலம் கொழும்பு சென்றுள்ளனர். இதன் மூலம் சென்னை நகரம் கொழும்பு நகருடன் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தது. இக் கப்பல் போக்குவரத்து 1964 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடந்து வந்தது.

தனுஷ்கோடி நகரில் சுமார் 5,000 மக்கள் வசித்து வந்தனர். இங்கு ரயில் நிலையம், காவல் நிலையம் அரசு மருத்துவமனை, சுங்க அலுவலகம், ஆரம்பப் பள்ளிக்கூடம், கிறிஸ்தவ தேவாலயம் ஆகியனவும் இயங்கி வந்தன. அருள்மிகு சேதுமாதவப் பெருமாள் என்ற திருப்பெயரில் ஸ்ரீராமருக்கு என 108 வைணவத் தலங்களுக்கு நிகராகக் கருதப்பட்ட ஆலயமும் இருந்துள்ளது.

இந் நிலையில், 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு, மணிக்கு சுமார் 120 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் தனுஷ்கோடிக்குள் புகுந்தது. இக் கடும்

புயலால் ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே சென்று கொண்டிருந்த ரயில் கடல் கொந்தளிப்பால் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணம் செய்த 120 கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து பயணிகளும் கடலுக்கு இரையாகிப் போன கொடூர சம்பவமும் நடந்தது.

இப் புயலால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்துக்கும் பாம்பனுக்கும் இடையே கப்பல்கள் குறுக்கே செல்லும்போது உயரவும், தாழவும் போல அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மிக்க பாலமும் கடல் கொந்தளிப்பில் சேதமானது. தனுஷ்கோடியில் மட்டும் சுமார் 1875 ஏக்கர் நிலப்பரப்பு கடலுக்குள் சென்று விட்டதுடன், துறைமுகமும் அழிந்து போனது.

இத் துயரச் சம்பவம் 23.12.1964-ல் நடந்தது. அரசும் அதே ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியில் இது மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக அறிவித்தது.

புயலின் பாதிப்புக்குள்ளான ஒருசில சிதைவடைந்த கட்டடங்கள் மட்டும் அங்கு தற்போது உள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் சார்பில் மீனவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக பைபர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வகுப்பறைகள் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றும் அரசால் கட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிற்குள் வருவதற்காக கரையேறும்போது, அவர்களை வரவேற்கும் நுழைவுவாயிலாக ஊடகங்களில் தலைகாட்டிய தனுஷ்கோடியின் வரலாறு, மீண்டும்

சேது சமுத்திரத் திட்டம் மூலமாக உயிர் பெற்று விடும் என்பதும் கனவாகவே இருக்கிறது. சேதுபந்தம் எனப் புகழப்படும் இரு கடல்களும் சங்கமிக்கும் இப் பகுதியில் தான் இன்றும்கூட பிற மாநிலத்தவர்கள் தமது முன்னோர்களுக்கான சடங்குகளைச் செய்து வருகின்றனர்.

கடும் புயலின் கோரக் கரங்களால் கசக்கி எறியப்பட்ட தனுஷ்கோடியின் பெருமையை மீண்டும் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் துயரங்கள் அனைத்தும்

களையப்பட்டு, தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். 1911-ல் பிரிட்டிஷாரால் துவக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து வரும் 2011-ல் 100 ஆண்டுகளை எட்டிவிடவுள்ள நிலையில், தனுஷ்கோடியில் கடல் நீர் புகுந்து கண்ணீரால் எழுதப்பட்ட அந்தச் சோக நிகழ்வு ஏற்பட்டு 45 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.