பல கோடியும் தெருக் கோடியும்...!
தேர்தல் திருவிழா தொடங்கி ஜோராக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியின் பரிபூரண ஆசியோடு களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்கள் முதல், நான்கைந்து பேருடன் பிரசாரம் செய்யும் சுயேச்சை வேட்பாளர் வரை அனைவரும் வாரி


தேர்தல் திருவிழா தொடங்கி ஜோராக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியின் பரிபூரண ஆசியோடு களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்கள் முதல், நான்கைந்து பேருடன் பிரசாரம் செய்யும் சுயேச்சை வேட்பாளர் வரை அனைவரும் வாரி இறைப்பது பணம் என்பது ஊரறிந்த விஷயம்.
இதையும் தாண்டி, வேட்பாளர்களின் பிரசார அணுகுமுறை என்பது சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கியது. ஒரு மக்களவைத் தொகுதி என்பது 6 சட்டப் பேரவைத் தொகுதிகளையும், 1,300-க்கு மிகாத வாக்குச் சாவடிகளையும் உள்ளடக்கியது.
வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அங்கிருந்து களைகட்டுகிறது திருவிழா.
"தன்னைத் தான் கட்சி வேட்பாளராக அறிவிக்கும்' என்கிற அதீத நம்பிக்கையில் வேட்புமனுவுக்கு முன்பே காசை வாரி இறைக்கும் அட்வான்ஸ் வேட்பாளர்களும் உண்டு.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 5 பேர் தான் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், தாக்கல் செய்ய வரும் போது எந்த விதியும் கிடையாது. படை பரிவாரங்களுடன் தனது பலத்தைக் காட்டும் வேட்பாளர் அதற்காக செய்யும் குறைந்த பட்ச தொகை ரூ. 1 லட்சம். அதிகபட்சத் தொகையைக் கேட்டால் மயக்கம் வந்து விடும். மதுரையில் ஐந்து லகரம் செலவு செய்யப்பட்டதாக காற்று வாக்கில் வந்த அதிகாரப்பூர்வமற்ற செய்தி கூறுகிறது. இது முதல் கட்டம் தான்.
அடுத்ததாக, அரசியல் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்கள் என்றால் மாநகரங்களில் பகுதி வாரியாகவும், மாவட்டங்கள் எனில் ஒன்றியங்கள் வாரியாகவும் செயல் வீரர்கள் கூட்டங்களை நடத்தியாக வேண்டும்.
ஒரு மக்களவைத் தொகுதியில் 12 ஒன்றியங்கள் வரை வரும். ஒரு ஒன்றியத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை என்றாலும், செயல் வீரர்கள் கூட்டத்துக்கு ஆகும் செலவு மட்டும் ரூ. 24 லட்சத்தைத் தாண்டும்.
தலைவர்கள் கூட்டமெனில்... ஒரு மக்களவைத் தொகுதி என்றால், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசார பொதுக் கூட்டங்கள் நிச்சயம்.
கட்சியின் இரண்டாவது நிலைத் தலைவர்கள் கூட்டம் என்றாலே அதற்கு ரூ. 25 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்ய நேரிடும். முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்டம் என்றால் கேட்கவா வேண்டும். லட்சங்கள் பத்தாது. ஆட்களை திரட்டுவது, "டாஸ்மாக்' செலவு, சாப்பாடு என குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை செலவு என்பது எழுதப்படாத விதி. மதியம் பிரியாணி, இரவு சாப்பாடு, டாஸ்மாக் செலவு, கைச் செலவு என ஒரு தொண்டருக்கு மட்டும் ரூ. 500 செலவிடப்படும். அப்படியானால், ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு ஆகும் செலவை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
கூட்டங்களை நடத்தினால் போதுமா? தொகுதியில் தேர்தல் வேலை பார்க்க அலுவலங்கள் வேண்டாமா? ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒரு அலுவலகம் வீதம், 6 அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன. வாடகையைத் தவிர்த்து, பிரசாரக் காலம் முடியும் வரை அவற்றின் பராமரிப்புக்கு மட்டும் ரூ. 30 ஆயிரம் செலவு செய்யப்படும். இந்தச் செலவு, தேர்தல் பணிமனைகளை அமைக்கும் செலவுக்குள் வராது.
சுவரொட்டிகளும், வாக்குச் சாவடி சீட்டுகளும்... சுவரொட்டிகள் ஒட்டுவது, வாக்குச் சாவடி சீட்டுகள் விநியோகிப்பது ஆகியன வேட்பாளர்கள் வகுத்துள்ள விதிகளில் முக்கியமானது. அந்த இரண்டுக்கு மட்டும் செலவிடப்படும் குறைந்தபட்ச தொகை ரூ. 1 லட்சத்தைத் தாண்டும்.
பிரசாரத்தில் வாகன பிரசாரம் ஒருவகை. தலைவர்கள் இல்லாமல், ஒலி பெருக்கி மூலம் வேட்பாளர்களின் சின்னத்தை வாக்காளர்களின் மனதில் பதிய வைப்பது தான் அதன் டெக்னிக்.
குறைந்தது ,ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் இரண்டு வாகனங்கள் வீதம், ஒரு மக்களவைத் தொகுதியில் 12 வாகனங்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும். பிரசார காலம் முடியும் வரை, அதற்கு ஆகும் குறைந்த பட்ச செலவு ரூ. 30 ஆயிரத்தைத் தாண்டும். அது வண்டிக்கான வாடகை மட்டும். அதில் வருவோருக்கு உணவு, டாஸ்மாக் செலவு என்பது தனிச் செலவு.
அது ஒரு நபருக்கு ரூ. 500 வரை ஆகும். 4 பேர் வந்தால், ரூ. 2 ஆயிரம். ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு ரூ. 2 ஆயிரம் எனில், தேர்தல் பிரசாரம் 15 நாள் நடைபெற்றால் அதன் செலவு ரூ. 1 லட்சத்துக்கும் மேல். இப்படி 12 வாகனங்கள்.
கொடிகள் தயாரிப்பு, வாக்காளர்களை கடைசி நேரத்தில் கவனிப்பது என தற்போதைய பிரசார நுணுக்கள் அனைத்தையும் கணக்கிடாமல் ஒரு வேட்பாளர் தேர்தலுக்காக செலவிடும் குறைந்த பட்ச தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 5 முதல் ரூ. 10 கோடியாகும்.
அவ்வளவு செலவிட்டும் அவர் வெற்றி பெறுவாரா? என்றால் அதுதான் இல்லை. ரூ. 5 கோடிகள் வரை செலவு என்பது குறைந்தபட்சம் ஒரு வேட்பாளர் செய்யும் செலவு. வெற்றி வாகை சூட வேண்டுமானால் குறைந்தபட்சம் ரூ. 15 கோடி வரை செலவிடுவது அவசியம். மக்களவை உறுப்பினர் என்பது மாறி "மணி பவர்' (எம்.பி.) என்ற நிலைக்கு தேர்தல் களம் வந்து விட்டது காலத்தின் கோலம் தான்.
பல கோடிகளை வாரியிறைத்து போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரைத் தனது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கும் அந்த வாக்காளர் இருப்பது என்னவோ தெருக் கோடியில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...