முறைகேடாக பயன்படுத்தப்படும் மத்திய அரசு மானியக் கடன்

ஈரோடு : மண்புழு உரம் தயாரிக்க மத்திய அரசு மானியத்துடன் வழங்கும் கடனுதவி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இத்திட்டத்தின் நோக்கமே சிதைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கதர் கிராம தொழில்
முறைகேடாக பயன்படுத்தப்படும் மத்திய அரசு மானியக் கடன்
Updated on
2 min read

ஈரோடு : மண்புழு உரம் தயாரிக்க மத்திய அரசு மானியத்துடன் வழங்கும் கடனுதவி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இத்திட்டத்தின் நோக்கமே சிதைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் கதர் கிராம தொழில்கள் ஆணையம், கிராமங்களில் விவசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதற்கு மானியத்துடன் கடனுதவி அளிக்கிறது.  இந்த ஆணையம் 113 தொழில்களுக்கு கடனுதவி அளிக்கிறது.  

தொழில் தொடங்க விரும்புவர்களிடம் விண்ணப்பம் மற்றும் திட்ட அறிக்கையினை பெற்று, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு பரிந்துரையின்பேரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இந்த கடனுதவியை அளிக்கின்றன.  ரூ.25 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.  இதில் 10 முதல் 35 சதம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்திற்கும் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் வங்கிக் கடனை பெற்றுத்தருகிறது. தொழில் தொடங்க சொந்த இடம், சொத்து ஆவணம், திட்ட அறிக்கை உள்ளிட்ட வங்கிகள் கோரும் பிற ஆவணங்கள் இருந்தால் ரூ.7 முதல் ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது. பெண்கள் பெயரில் இத்திட்டம் தொடங்கப்படும் பட்சத்தில் 35 சதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

மண்புழு உரம் தயாரிக்கும் நிறுவனம் தொடங்குவதற்கு மாட்டுக்கொட்டகை போன்று  100 மீட்டர் நீளமுள்ள 2 கட்டங்கள் இருந்தால்போதும். இதனால் இத் திட்டத்தை தொடங்க முன்வருபவர்களுக்கு கடன் பெற்றுத்தர சில ஏஜண்டுகள் உள்ளனர். வங்கி அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது, மண்புழு உரம் தயாரிப்பது போன்று செயல்பாடுகள் இருந்தால் போதும். மற்றவற்றை இந்த ஏஜண்டுகள் பார்த்துக்கொள்கின்றனர். மொத்த கடனில் 10 சதம் வரை கமிஷன் கொடுத்தால்.  கடனை பெற்றுக்கொடுத்துவிடுகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் கடன்பெற்றவர்களில் பெரும்பாலனவர்கள், கடன் தொகையை நிதி நிறுவனம் மற்றும் வணிக நிறுவனங்களில் முதலீடு செய்து அதிக வட்டியும்,  லாபமும் சம்பாதிக்கின்றனர். இங்கு கடன் பெற்றவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் போர்வையில் உள்ள தொழிலதிபர்கள். இதனால்  தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்திவிடுகின்றனர்.  

மேலும், இத்திட்டதின் கீழ் கடன் பெற்றவர்களில் பெரும்பாலனவர்கள் தொழிலில் ஈடுபடுவதில்லை.  மண்புழு உரம் தயாரிக்க கட்டப்பட்ட ஆஸ்பெட்டாஸ் கூரை கட்டடங்கள் பல இடங்களில் மாட்டுத்தொழுவங்களாகவும்,  தானிய மூட்டைகளை அடுக்கிவைக்கும் கிடங்குகளாகவும் மாறிவிட்டன.

இதுகுறித்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கச் செயலர் சுபி.தளபதி கூறியது: மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் கதர் கிராம தொழில்கள் ஆணையம் பரிந்துரையின்படி கடந்த 4  ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சுமார் ரூ.5 கோடி வழங்கியுள்ளன. கடன்பெற்றவர்களில் 90 சதம் பேர்  இத்தொழிலை செய்வதில்லை.  ரசாயன உரங்களின் பயன்பாடு குறைந்து இயற்கை உரங்களின் பயன்பாட்டினை அதிகரிக்கவும், விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து விவசாயிகள் வளம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இத்திட்டத்திற்கு மத்திய அரசு 35 சதம் வரை மானியம் அளித்துள்ளது.

ஆனால் இத் திட்டத்தின் நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை. இத்திட்டத்திற்கு வழங்கப்படும் மானியக்கடன் உண்மையான விவசாயிகளுக்குச் சென்றடைய வேண்டும்.  கதர் கிராம தொழில்கள் ஆணைய அதிகாரிகள் சிலர் முறைகேடுகளுக்கு உதவியாக இருப்பதாலும், இத்திட்டத்திற்கு கொடுத்த கடன் வசூலாகிவிடுகிறது என்று வங்கிகள் கருதுவதாலும், விவசாயிகள் முன்னேற மத்திய அரசு வழங்கும் மானியக்கடன் தகுதியானவர்களை சென்றடையவில்லை என்றார். இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறியது:

கதர் கிராம தொழில்கள் ஆணையம் பரிந்துரையின் பேரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மண்புழு உரம் தயாரிக்க வழங்கப்பட்ட கடனுதவியை பெற்றவர்கள், இந்த நோக்கத்திற்காக நிதியை பயன்படுத்தவில்லை என விவசாய சங்க பிரதிநிதிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த திட்டத்திற்காக வங்கி கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.  இதன்பிறகு  கள ஆய்வு நடத்த திட்டுமிட்டப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com