ஆட்டம் காணும் திராவிட அடித்தளம்!

திருநெல்வேலி, பிப். 12: தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலம் தொடங்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த மாணவர் சமுதாயத்தின் மத்தியில் இப்போது அக்கட்சிகளின் செல்வாக்கு குறைந்து வருகிறதோ என எண்ணத் த
Updated on
2 min read

திருநெல்வேலி, பிப். 12: தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலம் தொடங்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த மாணவர் சமுதாயத்தின் மத்தியில் இப்போது அக்கட்சிகளின் செல்வாக்கு குறைந்து வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள மாணவர் பேரவைத் தேர்தல்களில் பெரும்பான்மையான இடங்களை இடதுசாரி கட்சியைச் சேர்ந்த இயக்கமே கைப்பற்றியிருப்பது இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறது.

சமீபகாலமாக மாணவர்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் மீதான ஆர்வம் குறைந்து வருவது கண்கூடு. தற்கால அரசியலின் அவலப்போக்கு அதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.

 அதிலும், தமிழ்நாட்டு அரசியலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு மாணவர்கள் மத்தியில் சரிந்து வருவதை அக்கட்சி நிர்வாகிகளேகூட ஒப்புக் கொள்கின்றனர்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் மொத்தம் 66 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இந்த ஆண்டு 51 கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் 47 கல்லூரிகளை இந்திய மாணவர் சங்கம் (மார்க்சீய கம்யூனிஸ்ட் சார்பு) கைப்பற்றியுள்ளது. எஞ்சிய 4 கல்லூரிகளில் ஒன்றைக் கூட திராவிடக் கட்சிகள் கைப்பற்றவில்லை. அதுமட்டுமல்ல அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவையையும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்திய மாணவர் சங்கமே கைப்பற்றியுள்ளது.

பெரும்பாலான கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்க வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட திராவிடக் கட்சிகளின் அனுதாபிகள் தோல்வியைத் தழுவியுள்ளனர். இதர 15 கல்லூரிகளில் சிலவற்றில் குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தல் நடத்தப்படவில்லை அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளால் தேர்தல் நடைபெறவில்லை.

இத்தனைக்கும் இந்த மாவட்டங்களில் இடதுசாரி கட்சிகளுக்கு பெருத்த ஆதரவு தளம் உண்டு என கூறிவிட முடியாது. இம்மூன்று மாவட்டங்களிலும் தற்போது மொத்தம் உள்ள 25 சட்டப் பேரவைத் தொகுதிகளில் (திருநெல்வேலி-11, தூத்துக்குடி-7, கன்னியாகுமரி-7) கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 2 சட்டப் பேரவை தொகுதிகளில் மார்க்சீய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், 4 மக்களவைத் தொகுதிகளில் (திருநெல்வேலி-2, தூத்துக்குடி-1, கன்னியாகுமரி தலா-1)

தென்காசி தொகுதியில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது.

 மாறாக, திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக, மதிமுக வசம் மொத்தம் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளும், இரண்டு மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. மக்கள் மத்தியில் இத்தனை செல்வாக்கும் இருந்தும், திராவிடக் கட்சிகளின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடித்தளமான மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளதற்கு காரணம் என்ன?

 ""திமுகவில் தற்போது மாநில அளவில் மட்டுமே மாணவர் அணிக்கான நிர்வாகிகள் உள்ளனர். மாவட்ட அளவில் நிர்வாகிகள் கிடையாது. முன்பெல்லாம், கட்சித் தலைவர்கள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் மத்தியில் எழுச்சி மிகுந்த உரைகளை நிகழ்த்துவார்கள். அது கட்சி மீது மாணவர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும். இப்போது அத்தகைய கூட்டங்கள் வெகுவாக குறைந்து விட்டன. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்துவிட்டதால் கட்சியின் அடிமட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான்'' என்கிறார் திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர்.

அதிமுகவில் மாவட்ட அளவிலான மாணவரணி நிர்வாகிகள் இருந்தபோதிலும், அதன் செயல்பாடு பெரிதாக இல்லாததால் பலன் தென்படவில்லை. எனவே, அவர்களது நிலையும் பலவீனம் அடைந்துள்ளது. மதிமுகவின் செயல்பாடும் குறிப்பிடும்படியாக இல்லை.

 கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடக் கூடாது என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோ கமிட்டி அறிக்கை கூறுகிறது. எனவே எல்லாம் மறைமுகமாகத்தான் நடந்து வருகிறது.

அதனால், திராவிடக் கட்சிகள் மாணவர் பேரவைத் தேர்தலில் ஆர்வம் காட்டுவதில்லை என தோல்விக்கு காரணம் கூறி அவர்கள் தப்பிக்க இயலாது. சில கல்லூரிகளில் திமுக, அதிமுக நிர்வாகிகளின் வாரிசுகள் அல்லது அவர்களது ஆதரவு பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட்டும் தோல்வியையே சந்தித்துள்ளனர் என மாணவர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

திராவிட இயக்கங்கள் செயல்படவே இல்லை என்றும் கூறிவிடவும் முடியாது. வெற்றி பெற்ற மாணவர் பேரவை நிர்வாகிகளை அணுகி அவர்களிடம் "பேச்சுவார்த்தை நடத்தி' தங்கள் கட்சிக்கு இழுக்கும் முயற்சியை மேற்கொள்வதுண்டு என்கின்றனர் மாணவர் பேரவை நிர்வாகிகள்.

 ""மாணவர்களின் பிரச்னைகளுக்காக யார் போராட முன்வருகிறார்களோ அவர்களுக்கு பின்னால்தான் மாணவர்கள் நிற்பார்கள். அந்த வகையில் இடதுசாரி இயக்கங்களின் அடிப்படையான போராட்டக் குணம் மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் எங்கள் வெற்றி எளிதாகி உள்ளது'' என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. அருண் பிரவீன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com