விதைகளை எளிய முறையில் பாதுகாக்கும் விதை கலசங்கள்
சிதம்பரம்,மே 19: கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் விதைகள் வர்த்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக உயர் விளைச்சல் ரகங்கள், ஒட்டு ரகங்கள் அதிக விலையில் வேளாண் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட


சிதம்பரம்,மே 19: கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் விதைகள் வர்த்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக உயர் விளைச்சல் ரகங்கள், ஒட்டு ரகங்கள் அதிக விலையில் வேளாண் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளின் சாகுபடிச் செலவுகளை அதிகரிக்கச் செய்கிறது.
இத்தகைய நடைமுறைச் சூழலில் குறைந்த செலவில் வேளாண் சாகுபடிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் நமது பாரம்பரிய விதைகளை பாதுகாக்கவும் விதைக் கலசங்கள் பெரிதும் உதவி செய்கின்றன.
பயன்பாட்டு முறைகள்: பல்லாண்டுகளாக தமிழக கிராமங்களில் விதைகளை மண் பானைகளில் பாதுகாக்கும் முறையே தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
இருப்பினும் விவசாயிகள் பல சிறு தானிய மற்றும் பயிர் வகைகளை எளிதான முறையில் நீண்ட காலத்துக்கு தொடர்ச்சியாக பாதுகாக்க விதைக் கலசங்களை பல முன்னோடி முற்போக்கு பாரம்பரிய விவசாயிகள் உருவாக்கி வெற்றிகரமாக குறைந்த செலவில் தங்களின் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த புதிய விதை பாதுகாப்பு முறையில் விவசாயிகள் தங்களின் விதைத் தேவை, நிலத்தின் அளவு, சாகுபடி செய்யப்படும் பயிர்களை அடிப்படையாகக் கொண்டு விதைத் கலசங்களை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாரம்பரிய குயவர்களின் உதவியுடன் உருவாக்கப்படும் உறுதியான மண் கலசங்கள் நன்றாக சுத்தப்படுத்தி வெய்யிலில் காய வைக்கப்படுகிறது. பின்னர் விதைகளை நன்றாக சுத்தப்படுத்தி, அரிப்புகள் கொண்டு களை விதைகள், இதர வேளாண் கழிவுகளை அப்புறப்படுத்திவிட்டு வேம்பு, நொச்சி மற்றும் தங்கள் பகுதியில் கிடைக்கும் மருத்துவ குணமுள்ள மூலிகை இலைகள், சிறிய துண்டுகளாக மஞ்சள் கலக்கப்பட்டு பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பின்னர் விதைகள் பானைகளில் உள்ள தடுப்புகளில் வைத்து தனித்தனியாக நீண்ட காலத்துக்கு பாதுகாக்கப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒரு விதைக் கலசத்தைச் கொண்டே பல ரக விதைகள், பல பயிர்களின் விதைகளை எதிர்கால தேவைக்கு எளிதாக பாதுகாக்க முடியும்.
பெரிய விவசாயிகள் தங்களின் சாகுபடி தேவை மற்றும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பெரிய அளவு விதை கலசங்களில் அதிகளவில் விதைகளை சேகரித்து எளிதாக பயன்படுத்தி அதிகளவு பொருளாதார லாபங்களை பெற முடியும்.
சிறு தானிய விதைகள், தீவனப் பயிர்களின் விதைகள், மூலிகைப் பயிர்களின் விதைகள், காய்கறி விதைகளையும் நீண்ட காலத்துக்கு எளிதாக பாதுகாக்க முடியும்.
பிற பயன்கள்: விதைக் கலசங்களைக் கொண்டு தமிழக விவசாயிகள் நீண்ட காலத்துக்கு விதைகளை பாதுகாத்து, குறைந்த செலவில் வேளாண் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டு அதிக லாபம் பெற முடியும்.
பாரம்பரிய விதைகளுக்கு அதிகளவு வர்த்தக வாய்ப்புகள் உள்ள நிலையில் நமது விவசாயிகள் விதைக் கலசங்கள் வாயிலாக விதைகளை பாதுகாத்து விதை வர்த்தகம் மற்றும் வணிகத்தில் நல்ல வருமானம் பெறலாம்.
சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், சுயஉதவிக் குழுவினர் குறைந்த செலவில் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் வேளாண் பணிகளை மேற்கொள்ள இந்த விதைக் கலசங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.
எனவே குறைந்த செலவில் அதிக லாபம் பெறவும், நமது பாரம்பரியமிக்க விதைச் செல்வங்களை பாதுகாக்க உதவும் விதைக் கலசங்களை பயன்படுத்தி தமிழக விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்கிறார் அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...