/

தமிழகம் முழுவதும் இரண்டே போலி ரேஷன் அட்டைகள்!

சென்னை, அக். 19: தமிழகம் முழுவதும் போலி ரேஷன் அட்டைகளை பொது மக்கள் தாங்களாக முன்வந்து அளிக்கும் திட்டம் பலன் அளிக்கவில்லை.   காலக்கெடு அளிக்கப்பட்ட 15 நாள்களில் தமிழகத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:41 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, அக். 19: தமிழகம் முழுவதும் போலி ரேஷன் அட்டைகளை பொது மக்கள் தாங்களாக முன்வந்து அளிக்கும் திட்டம் பலன் அளிக்கவில்லை.

  காலக்கெடு அளிக்கப்பட்ட 15 நாள்களில் தமிழகத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே தங்களிடம் இருந்த போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைத்துள்ளனர்.

  தமிழகத்தில் போலி ரேஷன் அட்டைகளைக் களையும் பணியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாவட்ட வாரியாக போலி ரேஷன் அட்டைகளை கணக்கெடுக்கும் பணிகள் நடத்தப்பட்டன. பல்வேறு கால கட்டங்களில் வீடு வீடாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

  இதன்பயனாக, தமிழகத்தில் சுமார் 25 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் இருப்பதாகத் தெரிய வந்தது. இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என பல்வேறு தரப்பிலும் கருத்து எழுந்தது. இதைத் தொடர்ந்து, போலி ரேஷன் அட்டைகளை தாங்களாக முன்வந்து அளிக்கும் திட்டத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கொண்டு வந்தது.

இரண்டே இரண்டு பேர்: கடந்த மாதம் 21-ம் தேதி இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இரண்டு வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இந்த காலக் கட்டத்துக்குள் பொது மக்கள் தாங்களாக முன்வந்து தங்களிடமுள்ள போலி ரேஷன் அட்டைகளை உணவுப் பொருள் வழங்கல் துறையின் உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலரிடம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த அறிவிப்பு மக்களிடம் எந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மாநிலத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டும் தங்களிடம் போலி ரேஷன் அட்டைகள் இருப்பதாகத் திருப்பி அளித்துள்ளனர். அதாவது, இருவேறு முகவரியில் இரண்டு அட்டைகள் இருப்பது போன்ற காரணங்களால் அவர்கள் திருப்பி அளித்துள்ளனர். அந்த இரண்டு பேரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

மீண்டும் வாய்ப்பு: இதனிடையே, போலி ரேஷன் அட்டைகளை தாங்களாக முன்வந்து அளிக்கும் வாய்ப்பை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீண்டும் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

  "போலி ரேஷன் அட்டைகளை அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு வார காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி போலி ரேஷன் அட்டைகளை வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை: போலி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போருக்கு அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் வழி உள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.