நடமாடும் மருத்துவமனைகள் கண்காணிக்கப்படுமா?

திருச்சி: கிராமப்புற மக்களுக்கு முழுமையான சேவையை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் நடமாடும் மருத்துவமனை சேவையை அரசு கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கிராமப்புற மக்கள் அனைவருக்
Updated on
2 min read

திருச்சி: கிராமப்புற மக்களுக்கு முழுமையான சேவையை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் நடமாடும் மருத்துவமனை சேவையை அரசு கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கிராமப்புற மக்கள் அனைவருக்கும் மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2010-ம் ஆண்டில் நடமாடும் மருத்துவமனை சேவையை அப்போதைய திமுக அரசு தொடங்கியது. இதன்மூலம் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் (ஊராட்சி ஒன்றியம்) ஒரு வாகனம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 385 வட்டாரங்களில் இந்த மருத்துவச் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு ஓட்டுநர் என மொத்தம் 4 பேர் பணியில் உள்ளனர்.

இந்த வாகனம் பணி நாள்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலையில் ஒரு கிராமம், மாலையில் ஒரு கிராமம் என நாள்தோறும் இரண்டு கிராமங்களில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும். சனிக்கிழமை காலை ஒரு கிராமத்தில் மட்டும் சிகிச்சை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள வாகனம், அந்தந்த வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்.

நடமாடும் மருத்துவமனை மூலம் கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிகள் அலைச்சல் இல்லாமல் சிகிச்சை பெற முடியும். மேலும், மருத்துவச் சிகிச்சையை நாடாமல் வேறு வழிகளை (மந்திரம், மூலிகை) தேடிச்சென்று அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு, மருத்துவச் சிகிச்சையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின்படி வாகனம் செல்லும் கிராமங்கள் தேர்வு செய்யப்படும். இதன்படி தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் மாதம் ஒரு முறை இந்த வாகனம் செல்ல வேண்டும்.

அவ்வாறு கிராமங்களுக்குச் செல்லும்போது, அங்கு சிகிச்சை பெற்றவர்களின் பெயர் விவரங்களை எழுதி, அவர்களிடம் கையெழுத்துப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போது இந்த வாகனத்தில் ரத்தப் பரிசோதனை ஆய்வகத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டதை செயல்படுத்த அரசு நிகழாண்டில் ரூ. 29.36 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால், இப்படி ஒரு சேவை உள்ளதை பெரும்பாலான கிராம மக்கள் அறியாததால், இதைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த வாகனங்கள் பெரும்பாலும் கிராமங்களுக்கு செல்வதில்லை.

அதேசமயம், கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் கிராமங்களில் உள்ள கர்ப்பிணிகள் உள்ளிட்டோரிடம் கையெழுத்துப் பெற்று ஆவணங்களை தயார் செய்துகொள்வதாகக் கூறப்படுகிறது.

அதோடு, இந்த வாகனங்களுக்கு வழங்கப்படும் டீசல் மற்றும் மருந்துகள் பல இடங்களில் மருத்துவர்களின் சொந்த தேவைக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உரிய கண்காணிப்பு இல்லாததால், இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு பயனளிக்காமல் வீணாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் வை. வீரபாண்டியன் கூறியது: இந்த மருத்துவக் குழுவின் செயல்பாடுகளை கண்காணிக்கும் விதத்தில், நடமாடும் மருத்துவமனை வாகனம் கிராமத்திற்கு சென்று சிகிச்சை அளிக்கும் கட்டடத்தின் முன், ஒரு அறிவிப்பு பலகை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், இந்த வாகனம் அடுத்து வரும் மாதம், தேதி, நேரம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்றார்.

இதே நடைமுறையை அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்றுவதன் மூலம் இந்தத் திட்டத்தின் நோக்கம் வெற்றி பெறும். மேலும், இதற்கு ஒதுக்கப்படும் நிதியும் மக்களுக்கு முழுமையாகச் சென்றடையும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com