கடும் மின் வெட்டு: ஒசூரி-ருந்து கர்நாடகத்துக்கு இடம்பெயரும் தொழிற்சாலைகள்!

தொடரும் மின் வெட்டால், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலுள்ள தொழிற்சாலைகள் கர்நாடக மாநிலத்துக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.
Updated on
2 min read

தொடரும் மின் வெட்டால், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலுள்ள தொழிற்சாலைகள் கர்நாடக மாநிலத்துக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்திலிருந்த ஒசூரில் மகாராஷ்டிர முன்னாள் ஆளுநர் சி.சுப்பிரமணியத்தின் முயற்சியால் இரண்டு சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஒசூரில் டிவிஎஸ், அசோக் லேலண்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இவற்றுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வழங்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்களும் நிறுவப்பட்டன.

இந்த ஆலைகளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

மேலும், கர்நாடகம், ஆந்திரம், பிகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் வேலை தேடி ஒசூருக்கு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டால் தொழில் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தொழில் துறையில் முன்னணியிலிருந்த ஒசூரில் மின் வெட்டு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. சுமார்

10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாகத் தொழில் துறையினர் தெரிவித்தனர்.

சில நிறுவனங்கள் மட்டுமே ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கும் ஆள்குறைப்பு நடவடிக்கையால் 65 சதத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். மின் வெட்டால் வாகன உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது. குறித்த நேரத்தில் ஆர்டர்களை முடித்து விநியோகிக்க முடிவதில்லை. இதனால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணமும் தாமதமாகிறது.

மேலும், ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்வதால் கூடுதல் செலவு, தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரத்துக்கான ஊதியம் வழங்க வேண்டிய கட்டாயம், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வங்கிகள் கொடுக்கும் நெருக்கடி எனப் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஒசூரில் மூடப்பட்ட தொழில் நிறுவனங்களாலும், ஆள் குறைப்பு நடவடிக்கைகளாலும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். தினமும் ரூ.100 கோடியும், மாதம் ரூ.3,000 கோடி வரையிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று தொழில் துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மின் வெட்டால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து விடுபடும் நோக்கத்தில், மின் வெட்டு இல்லாத கர்நாடகத்துக்கு பல தொழில் நிறுவனங்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளன. ஒசூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் கர்நாடக மாநில எல்லை தொடங்கும் பகுதிகளான அத்திப்பள்ளி, சர்ஜாபுரா உள்ளிட்ட இடங்களில் புதிதாகத் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இந்த வகையில், சுமார் 10-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் இடம் பெயர்ந்துள்ளன. இங்கு 24 மணி நேரமும் மின்சாரம் இருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹோஸ்டியா சங்கத் தலைவர் கே.ராமலிங்கம் கூறியது:

ஒசூரில் மின் வெட்டால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் நிறுவனத்தினர் கூடுதல் வட்டிக்கு பணம் வாங்கி தொழில் நடத்தி வருகின்றனர். சிலர் தங்களுடைய சொத்துகளை விற்று தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுத்து வருகின்றனர் என்றார் அவர்.

ஒசூர் கோட்ட மின் வாரியச் செயற்பொறியாளர் ராமச்சந்திரன் கூறியது:

தினமும் பகலில் 4 மணி நேரமும், இரவில் 4 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கினால் நிலைமை சீராகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com