வாழ்விடங்களைப் பறிகொடுத்த யானைகள்!

சேலம், மே 4: மனிதர்களிடம் பறிகொடுத்த தங்களது சொந்த வாழ்விடங்களை மீட்பதற்காக 7 யானைகள் கொண்ட கூட்டம், 4 மாவட்ட வனத்துறையினருடன் தொடர்ந்து போராடி வருவது இயற்கை ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சங்க இ
வாழ்விடங்களைப் பறிகொடுத்த யானைகள்!
Updated on
2 min read

சேலம், மே 4: மனிதர்களிடம் பறிகொடுத்த தங்களது சொந்த வாழ்விடங்களை மீட்பதற்காக 7 யானைகள் கொண்ட கூட்டம், 4 மாவட்ட வனத்துறையினருடன் தொடர்ந்து போராடி வருவது இயற்கை ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சங்க இலக்கியத்தில் சுமார் 150-க்கும் அதிகமான பெயர்களில் அழைக்கப்பட்ட யானைகளுக்கும், தமிழகத்துக்கும் நீண்ட தொடர்பு இருந்துள்ளது. உலகில் சுமார் 50 நாடுகளில் யானைகள் காணப்பட்டாலும், ஆசிய அளவில் இந்தியாவில்தான் அதிகமாக (சுமார் 30 ஆயிரம்) யானைகள் உள்ளன. குறிப்பாக, தென் மாநிலங்களில் இதில் மூன்றில் 2 பங்கு அளவு உள்ளன.

எதிரிகளே இல்லாத விலங்கான யானைகளுக்கு, அண்மைக் காலமாக மனிதர்களே முக்கிய எதிரிகளாக உருவாகியுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 50 கி.மீ. வரை நடந்து சென்று 200 முதல் 400 கிலோ வரை பச்சைத் தாவரங்களை உண்டு வாழும் இயல்பு கொண்ட யானைகள், தங்கள் கூட்டத்துக்குள்ளேயே இனப் பெருக்கம் செய்து கொள்ளாது.

வழித்தடங்கள் 10: எனவே, இனப்பெருக்கத்துக்காகவும், உணவுக்காகவும் தலைமுறை தலைமுறையாக ஒரே வழித்தடத்தை (காரிடார்) பின்பற்றி இடம் பெயருபவை. கூரிய மதிநுட்பமும், நுண்ணிய நினைவுத் திறனும் கொண்ட இந்த யானைகளுக்கு நாடு முழுவதும் 88 வழித்தடங்களும், தமிழகத்தில் மட்டும் 10 வழித் தடங்களும் இருப்பதாக வன விலங்கு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் இருந்து ஓசூர் வழியாக திருப்பதி வனப் பகுதிக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து ஜவ்வாது மலைக்கும், மைசூரில் இருந்து சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளுக்கும், கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் இவை வந்து செல்வது வழக்கம். ஆனால், மக்கள் தொகை பெருக்கத்தால் அவற்றின் வழித் தடங்களில் உள்ள வனப் பகுதி, தேசிய நெடுஞ்சாலையாகவும், இருப்புப் பாதை, குடியிருப்பு, விவசாயத் தோட்டங்களாகவும் மாற்றம் அடையும்போது, யானைகள் குழப்பமடைந்து மக்களின் வாழிடங்களுக்குள் புகுந்து பொருள், உயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போலவே, கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் அனைத்து வகை விலங்குகளும் வசித்துள்ளன.

ஆனால் திருப்பதி, ஜவ்வாது மலை, கல்ராயன்மலை, சேர்வராயன்மலை, கொல்லிமலை போன்றவை ஆங்காங்கே இடைவெளியுடன் அமைந்திருப்பதால் மக்கள் செறிவு அதிகரித்து, நாளடைவில் யானை, புலி, கரடி போன்ற வன விலங்குகள் அருகி

விட்டன.

விரட்டுவதே இலக்கு: இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பதி வனப் பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட யானைகள் கொண்ட கூட்டம், அதன் வழித்தடத்தில் உள்ள ஜவ்வாது மலைப் பகுதிக்கு வந்துள்ளது. சுமார் 260 சதுர கிலோ மீட்டர் கொண்ட அந்த வனப் பகுதியில் இருந்து கொண்டு உணவுக்காக அடிக்கடி வேலூர், திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து சேதம் விளைவித்து வந்தது. மின் வேலி போன்ற மனித செயல்பாடுகளால் இறந்ததுபோக மீதமுள்ள 7 யானைகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலூர் மாவட்டத்தில் புகுந்தது. இதனால், வெடிகள் வெடித்தும், மேளங்கள் கொட்டியும் அவற்றை திருவண்ணாமலை வனப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். கடந்த மாதத்தில் அங்கிருந்து, விழுப்புரம் மாவட்டத்துக்குள் விரட்டப்பட்டது.

இப்போது விழுப்புரம் வனத்துறையினர் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பட்டாசுகளுக்கு செலவு செய்து சேலம் மாவட்ட வனப் பகுதிக்குள் விரட்டியுள்ளனர். இப்போது அதை எந்த மாவட்டத்துக்கு அனுப்புவது என்று தெரியாமல் சேலம், ஆத்தூர் வனச் சரக அலுவலர்கள் திண்டாடி வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களில் சுமார் 8 மனித உயிர்கள் வரையும், பல லட்சம் மதிப்பிலான பயிர்களும் சேதமடைந்துள்ள நிலையில் கருமந்துறை வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களில் இந்த யானைகளால் ஏராளமான பயிர்கள் சேதமடைந்துள்ளன.

சேலம் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் 24 சதம், அதாவது 1,254 சதுர கிலோ மீட்டர் வனப் பகுதி இருந்தாலும் அவற்றில் மக்கள் செறிவாக வாழ்ந்து வருகின்றனர். இதனால், இது யானைகளுக்கு ஏற்ற வனமாக இருக்காது என்கின்றனர் வனத்

துறையினர்.

தீர்வுதான் என்ன?

ஊருக்குள் புகுந்துவிட்டதாகக் கூறி அவை வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டிருந்தாலும், யானைகளுக்கு வனங்கள்தான் சொந்த வாழிடங்கள். இடையில் வந்த மனிதர்கள் அவற்றின் வீடுகளை அழித்து தங்களின் வீடுகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள்தான் என்கிறார் சேலம் மண்டல வனப் பாதுகாவலர் வெங்கடேஷ்.

தங்கள் எல்லையில் இருந்தால் பிரச்னைதான் என்று கூறி உணவு, தண்ணீர் இல்லாத இடத்துக்கு எத்தனை முறை விரட்டி அடித்தாலும் அவை பசியையும், தாகத்தையும் தணிக்க மனித வாழிடங்களுக்கு வந்து கொண்டேதான் இருக்கும். மேலும், அவற்றுக்கு மனிதர்களின் வீடு, அவர்களின் பயிர், தடுப்பு வேலி என எதுவுமே தெரியாத நிலையில், இவர்கள் ஏன் தங்களை விரட்டுகின்றனர் என்பதும் கூட தெரிந்திருக்க நியாயம் இல்லை என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.

எதிர்த்துக் குரல் கொடுக்கவோ, தனது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக நிலப்பறிப்பு தடுப்புப் பிரிவில் மனு கொடுக்கவோ இயலாத இந்த 7 ஜீவன்களுக்கும் அவற்றின் வழித்தடம் பறிக்கப்பட்டதையும், வனம் இனி அவற்றின் சொந்தம் இல்லை என்பதையுமே 4 மாவட்ட வனத்துறையினரும் விளக்கிக் கூற முயற்சிக்கின்றனர்.

அவற்றைப் பாதுகாப்பாக பிடித்துச் சென்று வாழத் தகுதியுள்ள வேறிடங்களில் விடுவதற்கான முயற்சிகளிலோ, அதற்கான சிந்தனையுடனோ அவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

பல நூறு ஆண்டுகளாக பூமியின் இயற்கைச் சமநிலையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இதுபோன்ற விலங்கினங்களை காப்பாற்ற அரசு முயற்சிக்கவேண்டும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com