ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஏற்காடு மலையை நோக்கி இடம் பெயரும் காட்டு யானைகள்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே முகாமிட்டிருந்த காட்டு யானைகள் ஏற்காடு மலைப் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றன.

News image
Updated On :1 ஜூலை 2013, 7:57 pm

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே முகாமிட்டிருந்த காட்டு யானைகள் ஏற்காடு மலைப் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றன.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வழிதவறி வந்த ஒரு குட்டி யானை உள்பட 6 காட்டு யானைகள் கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டம், மருதிப்பட்டி, மொரப்பூர், தென்கரைக்கோட்டை வனப் பகுதியில் முகாமிட்டிருந்தன. தென்கரைக்கோட்டையில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெயர்ந்து பாத்திமாநகர், பாஞ்சாலி நகர், பூதநத்தம் கிராமங்கள் வழியாக கதிரிபுரம் வனப்பகுதிக்குச் சென்றன. சுமார் 10 கி.மீ தொலைவு வயல்வெளி மற்றும் தார்ச்சாலை வழியாக இந்த யானைகள் சென்றன.

தற்போது யானைகள் முகாமிட்டுள்ள பொம்மிடி கதிரிபுரம் வனப் பகுதிக்கும், ஏற்காடு மலைக்கும் சுமார் 20 கி.மீ தொலைவு உள்ளது. இதனால், ஏற்காடு மலைக்கு யானைகளை இடம் பெயரச் செய்யும் நோக்கில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கன்றுக் குட்டி சாவு: உணவு, குடிநீர் தேடி வயல்வெளிக்கு வரும் போது பசு மாடுகள் இருந்தால் ஆத்திரமடையும் யானைகள், அவற்றைத் தாக்கிக் கொன்று விடுகின்றன. இந்த நிலையில், பாத்திமா நகரைச் சேர்ந்த விவசாயி கிறிஸ்டோவின் விவசாய நிலத்தில் இருந்த கன்றுக் குட்டியை யானைகள் மிதித்துக் கொன்றன. அந்த வழியில் இருந்த விவசாயி சாம்ராஜுக்குச் சொந்தமான கரும்புப் பயிர்களையும் யானைகள் சேதப்படுத்தின.

போக்குவரத்து நிறுத்தம்: அரூர் - பொம்மிடி சாலையில் உள்ள கதிரிபுரம் வனப் பகுதியில் யானைகள் திங்கள்கிழமை பகல் முழுவதும் முகாமிட்டிருந்தன. பகல் நேரங்களில் குடிநீர் தேடி விவசாய நிலப்பகுதிக்கும் யானைகள் வந்து சென்றன. இதனால், அந்த வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, அரூர்-பொம்மிடி வழியில் செல்லும் வாகனங்கள் பாப்பிரெட்டிப்பட்டி, மெணசி வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இன்னும் ஓரிரு தினங்களில் பொம்மிடி அல்லது பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீர்த் தேக்கம் வழியாக ஏற்காடு மலைக்கு யானைகள் இடம் பெயரலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

வனச் சரகர் என்.ஆறுமுகம், வனவர்கள் சி.வேடியப்பன், வெங்கடேசன், காண்டீயப்பன், செல்வராஜ், வனத் துறையைச் சேர்ந்த கிருஷ்ணன், பொன்னுசாமி உள்ளிட்டோர் யானைகளை இடம் பெயரச் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.