தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திட முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 16) உத்தரவிட்டுள்ளார்.
மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் மின்தடை அதிகரித்துவரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 16) தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய துணை நிறுவனங்களுடன் மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால், மாநிலத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் இல்லை.
இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களின் சில இடங்களில் உள்ள பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், அதிகரித்துள்ள மின் பயன்பாடு, பராமரிப்புப் பணிகள், பல்வேறு சேவைத் துறைகள் சாலை தோண்டும் பணிகளின்போது எதிர்பாராதவிதமாக மின்கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களினால் பகிர்மான அளவில் அவ்வப்போது மின்தடைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறான பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் ரூ. 2,275 கோடிமதிப்பில் மின்விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் ரூ. 10,109 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 231 புதிய துணை மின் நிலையங்கள் ரூ. 15,032 கோடி மதிப்பீட்டில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளன.
மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க (Fuse-Off Call) மையங்கள், 7 கூடுதல் மின்பழுது நீக்கும் குழுக்கள், 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 மின் புதைவட கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மின்னகம் (9498794987) மூலம் 24 மணி நேரமும் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக பொதுமக்களின் புகார்கள் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் வாட்ஸ்அப் சேவையும் புகார் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, மின் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems), புதிய அனல்மின் நிலையம் மற்றும்நீர்மின் திட்டங்கள் மூலம் எதிர்கால மின் தேவையையும் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Rs. 15,032 crore to strengthen power infrastructure Order issued to recruit 15,058 employees TN CM joseph vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










