கடும் வறட்சி காரணமாக கோவை மாவட்டத்தில் நெகமம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பணப் பயிரான தென்னை மரங்கள் கருகி வருகின்றன. வாழ்நாள் பயிரான தென்னையைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஒரு காலத்தில் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி அதிக அளவில் இருந்தது. அப்போது கூலிக்கு வேலை செய்யும் ஆள்களும் அதிக அளவில் இருந்தனர். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல கூலி ஆள்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துவிட்டது.
இதனால், கூலி ஆள்கள் மிகவும் குறைவாகத் தேவைப்படும் தென்னைக்குப் பெரும்பாலான விவசாயிகள் மாறிவிட்டனர். இதனால் பொள்ளாச்சிப் பகுதியில் மட்டும் தென்னை மிகவும் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
தென்னைக்குத் தண்ணீர் இருந்தால் போதும் என்ற நிலையில் பராமரிக்கவும் மிகக் குறைந்த ஆள்கள் இருந்தால் போதும். பாய்ச்சினால் கூட அதிகத் தண்ணீர் செலவாகும் என்பதால் பல விவசாயிகள் சொட்டு நீர்ப் பாசனத்துக்கு மாறிவிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்த கடும் வறட்சியால் வாழ்நாள் பயிரான பல லட்சம் தென்னை மரங்கள் வறண்டு போயின. வறட்சியிலும் வளரும் தன்மை மிக்க பல ஆயிரம் பனை மரங்களும் வறண்டு போனது வறட்சியின் கடும் தாக்கத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தது.
இருக்கும் உயிரைக் காப்பாற்றத் துடிப்பது போல் கிடைக்கும் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கித் தாங்கள் வளர்த்த தென்னையைக் காப்பாற்ற விவசாயிகள் முயற்சித்தனர். ஆனால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டமடைந்தனர்.
இந்த நிலையில் இப்போது கடந்த ஓராண்டாக தென்மேற்குப் பருவ மழையும் கைகொடுக்கவில்லை. வடகிழக்குப் பருவமழையும் வரவில்லை. இதனால் கோவை மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது.
இந்நிலையில் அணைகளிலும் தண்ணீர் இருப்பு மிகக் குறைவாகவே உள்ளது. குடிநீருக்கு மட்டும் போதுமான அளவில் உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் இருந்த தென்னை மரங்கள் வறண்டுள்ளன.
இது தொடர்பாக தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் டி.ஏ. கிருஷ்ணசாமிக் கவுண்டர் கூறியது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடும் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னமும் தென்னை விவசாயிகள் மீளவில்லை. இதற்குள் மீண்டும் பருவ மழை பொய்த்துள்ளது. இதனால் கோவை மாவட்ட விவசாயிகளுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்கள் வறண்டு போயுள்ளன. இதனால் கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
பாமாயிலுக்கு இறக்குமதி
வரி விதிக்கக் கோரிக்கை
தேங்காய் எண்ணெய்யின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்று தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத் தலைவர் டி.ஏ. கிருஷ்ணசாமிக் கவுண்டர் கூறியது: தென்னை விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்க அரசு தேங்காயைக் கொள்முதல் செய்து எண்ணெய்யாக்க வேண்டும். அதை ரேஷன் கடைகளின் மூலம் விநியோகம் செய்ய வேண்டும். பாமாயிலின் இறக்குமதியைக் குறைக்க கூடுதல் வரி விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
தேங்காய் விலை உயர்வு
தென்னை மரங்கள் வறட்சியால் கருகினாலும் தேங்காய் விலை கடந்த 15 நாள்களில் அதிகரித்துள்ளது.
தென்னந்தோப்புகளுக்கு வரும் வியாபாரிகள் உரித்து இருப்பு வைத்துள்ள எண்ணெய்ப் பதம் அதிகமிருக்கும் தேங்காய்களை ரூ.10 வரை கொள்முதல் செய்கின்றனர். அவர்களே மரத்தில் இருந்து பறித்துச் செல்வதானால் ரூ.7 வரை கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகளே மரத்தில் இருந்து பறித்துச் சென்றால் தேங்காய்க்கு ரூ.8 வரை விலை கிடைக்கிறது.
பொதுவாக ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தேங்காய் வரத்துக் குறைவாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக சென்ற ஆண்டை விட விளைச்சல் மிக, மிக குறைவாகத்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது. விலை உயர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம். மேலும், வட இந்தியாவில் கும்பமேளா கொண்டாடப்படுவதால் பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து அதிக அளவில் தேங்காய் அனுப்பப்படுவதுதான் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.