சிதிலமடைந்த சிவாலயம்:சீரமைக்குமா அரசு?

செஞ்சி அருகே அருகாவூரில் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் ஆலயம் பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில்

செஞ்சி அருகே அருகாவூரில் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் ஆலயம் பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்த ஆலயத்தை இந்து அறநிலையத்துறை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செஞ்சி என்றதுமே பழம்பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டைதான் நினைவுக்கு வரும். நாயக்க மன்னர்கள், சோழர்கள், சமணர்கள் என இப்பகுதியை நேரடியாகவும், ஆட்சியின் கீழ் குறுநில மன்னர்களை நியமித்தும் ஆட்சி செய்து வந்துள்ளனர்.

இவர்களது காலத்தில் ஒரு ஆட்சியை, பின்னர் வந்த ஆட்சி மிஞ்சும் வண்ணம் பல்வேறு கோயில்களை கலை நயத்துடன் கட்டி புகழ் சேர்த்து வந்துள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக செஞ்சியை சுற்றி அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த, புராதான மிக்க, கலைநயத்துடன் கூடிய ஆலயங்கள் பண்டைய வரலாற்றை இன்றளவும் பறைசாற்றுவதாக காணப்படுகின்றன.

அதுபோன்றதொரு அற்புத சிவன் ஆலயம் செஞ்சி வட்டம் அருகாவூர் கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயம் கி.பி.7-ம் நூற்றாண்டை சேர்ந்தது. தஞ்சை பெரிய கோபுரத்தை நினைவுபடுத்தும் இந்த ஆலயத்தின் கருவறையில், வன்னீஸ்வரர் என அழைக்கப்படும் சிவலிங்கம் காட்சி தருகிறார். இங்கு சங்கு சக்கரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் காட்சி தரும் சிலையும்

உள்ளது.

பராமரிப்பின்றி சிதிலமடைந்து போன இந்த ஆலயத்தில் இவ்வூரைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டும் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். திருவிழாக்கள் ஏதும் நடப்பதில்லை.  0.35 சென்டில் அமைய பெற்ற இக்கோயிலின் மதில் மற்றும் ஆலய சுவர்கள் அனைத்தும் மிக துல்லியமாகவும், நேர்த்தியாகவும் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு அற்புதமான அழகிய வடிவில் காட்சி தருகிறது. கோயிலின் சுற்றுப்பிரகாரம் அனைத்தும் சிதிலம் அடைந்து இடிந்து விட்டது. பின்புறம் சுற்றுப்பிரகாரம் மட்டும் இடியாமல் கலை நயத்துடன் அழகுடன் காட்சி தருகிறது.

கருவறை மீது ராஜகோபுரம்:இக் கோயில் கருவறை மீது ராஜகோபுரம் அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். தஞ்சை பெரியகோயில் மற்றும் கெங்கைகொண்ட சோழபுரம் ஆகிய கோயில்களில் மட்டுமே கருவறை மீது ராஜகோபுரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ள சன்னதிகளில் சிலைகள் பெயர்த்து எடுத்து களவாடப்பட்டுள்ளது. கல்லில் கலை நயம்மிக்க பீடம் மட்டுமே உள்ளது. மேலும் கல்லில் உள்ள தூண்களில் மிக பெரிய அளவில் ஆண் மற்றும் பெண் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலை தலைபாகையுடனும் முறுக்கு மீசை, மற்றும் கழுத்தில் உத்ராட்சமாலை அணிந்துள்ளது. மிகுந்த கலை வேலைபாடுகளுடன் இச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிதைக்கப்பட்ட ஆலயம்: இந்தக் கோயில் சோழர்கள் அல்லது நாயக்க மன்னர் காலத்தை சேர்ந்ததாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஒரு தூண்களில் கூட தெய்வ உருவம் இல்லை. சமண சமயம் தழைத் தோங்கியபோது சிதைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிருந்த கலை நயம்மிக்க கற்கள் மற்றும் தூண்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் உள்ள சித்தாமூருக்கு எடுத்து செல்லப்பட்டுவிட்டாகவும் இவ்வூர் முதியவர்கள் தெரிவித்தனர். ஒரு முறை இக்கோயிலுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

நடுகல் சொல்லும் செய்தி: திண்டிவனம் செண்டியம்பாக்கத்தில் கிடைக்கப்பெற்ற நடுகல்லில் உள்ள கல்வெட்டில் ஒய்மா நாட்டு அருகாவூரை சேர்ந்த வீரன் பசுக்கூட்டத்தை கவர்ந்து செல்ல முயன்றபோது இறந்துள்ளான் என்ற செய்தி உள்ளது.

சோழர் ஆட்சியில் அருகாவூர்: இந்த கல்வெட்டை பார்க்கும் போது பாண அல்லது கங்க அரசன் ஒருவனுடைய குறு நில மன்னனாக இவன் இருந்திருக்கக்கூடும். இதைப்பார்க்கும் போது சோழர்களின் ஆட்சியின் கீழ் அருகாவூர் இருந்துள்ளதாக தெரிகிறது.

அருகாவூர் கோயில் சிற்பங்களில் பெரும்பாலும் மன்னர் மற்றும் அரசி தோற்றம் உடைய சிற்பங்களே அதிக அளவில் உள்ளன. கோயிலின் உள்ளே உள்ள தூண்களில் மட்டும் சிவன் மற்றும் விநாயகர், முருகர் ஆகிய உருவங்களும் அழகிய கலைச் சிற்பங்களும் உள்ளன. சோழர்களா அல்லது நாயக்க மன்னர்களா என்பதை அறிய இக் கோயிலில் கல்வெட்டுகள் எங்கும் காணப்படவில்லை.

கோயிலின் எதிரே குளம் போன்ற வடிவில் கிணறு, 20 சென்ட்டில் இருந்துள்ளது. தற்போது மண் தூர்ந்து காணப்படுகிறது. மேலும் கோயிலுக்கு செல்லும் பாதைக்கு 23.75 சென்ட் இடம் உள்ளது. அருகில் உள்ள சிவனந்தல் கிராமத்தில் இக்கோயிலுக்கென 63.75 சென்ட் இடம் உள்ளது. 

களமிறங்க முடிவு: கம்பீரமாக காட்சி அளிக்கும் ராஜ கோபுரத்தில் உள்ள கலை நயம் மிக்க அமைப்பு, சிதிலம் அடைந்து விட்டது. இது எப்படி இருந்ததோ அதே போன்று தொல்லியல் துறையினரை வைத்து சீரமைக்கலாம். மேலும் சுற்றுப் பிரகாரம் இடது மற்றும் வலது, முன் புறம் ஆகிய வற்றை அமைக்க வேண்டும். மேலும் பராமரிப்பு பணிகளை செய்ய இவ்வூர் பொது மக்கள் தற்போது முயற்சி செய்து வருகின்றனர்.

வன்னீஸ்வரர் ஆலயத்தை புணரமைக்க இவ்வூர் பொது மக்கள் திருப்பணிக்குழுவை ஏற்படுத்தியுள்ளனர். எனவே வரலாற்று புகழ்மிக்க, பழம்பெருமை வாய்ந்த இந்த கோயிலை முழுமையாக சீரமைத்து வழிபாடு நடக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புக்கு:மேலும் இக் கோயில் குறித்த விவரங்கள் அறிய மற்றும் திருப்பணிக்கு உதவி செய்ய விரும்புவோர் ஏ.என்.செல்வராஜ், உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் (ஓய்வு) செஞ்சி வட்டம் அருகாவூர். கைபேசி: 9994311397 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் வரலாற்று வல்லுநர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தொல்லியல் துறையினர் அருகாவூர் வன்னீஸ்வரர் ஆலயத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டால் ஓரளவிற்கு வரலாற்றின் காலம் அறியப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com