

கிரைண்டரை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய கோவைக்கு தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான கிரைண்டர் ஆர்டர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் கோவை உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.
கிரைண்டர் அறிமுகம்: நாட்டிலேயே முதன்முறையாக கோவையில்தான் 1955-இல் கிரைண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் மாதத்துக்கு உற்பத்தியாகும் ஒரு லட்சம் கிரைண்டர்களில் கோவையின் பங்கு மட்டும் சுமார் 75 ஆயிரம். இங்கு உற்பத்தியாகும் கிரைண்டர்களின் ஆண்டு மதிப்பு சுமார் ரூ.225 கோடியாகும்.
700 நிறுவனங்களில் உற்பத்தி: கோவையில் உற்பத்தியாகும் கிரைண்டர்களில் 80 சதவீதம் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
மீதியுள்ள 20 சதவீதம் பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. கிரைண்டர் உற்பத்திக்கு மிகவும் முக்கியமான கற்களும், உதிரிப் பாகங்களும் கோவை பகுதியில் அதிகமாகக் கிடைப்பதால் குடிசைத் தொழில்போல சுமார் 700 கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர்.
எதிர்பார்ப்பு பொய்த்தது: கோவை பகுதியில் பாரம்பரிய கிரைண்டர்கள், டேபிள் டாப், டில்டிங் கிரைண்டர் எனப் பலவிதமான மாடல்களில் தயாரிக்கப்படுகின்றன. இதில், பாரம்பரிய மாடலில் 2 முதல் 40 லிட்டர் வரையிலான கிரைண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மிக்ஸி, கிரைண்டர் மற்றும் ஃபேன் ஆகியவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, ஆட்சிக்கு வந்தவுடன் விலையில்லாப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கிரைண்டர் தயாரிப்பின் தாயகமான கோவைக்குப் பெருமளவில் ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மிகக் குறைந்த அளவில் மட்டுமே ஆர்டர்கள் கிடைத்தன. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு பெருமளவில் ஆர்டர்கள் கிடைத்தன.
இந்த ஆண்டாவது கிடைக்குமா? இந் நிலையில், நடப்பு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரைண்டர்களைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கோவையில் உள்ள நிறுவனங்களுக்கு இந்த ஆர்டர்களைக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் கிரைண்டர்களுக்கு உள்ள பெருமை, மோட்டார்களுக்கு செம்புக் கம்பியில் காயில் கட்டுவதுதான்; இதற்கான விலை அதிகம். ஆனால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டாரின் காயில் அலுமினியக் கம்பியால் கட்டப்படுகிறது; இதன் விலை மிகக் குறைவு.
விலையை மட்டும் பார்க்காமல் தரத்தையும் தமிழக அரசு உறுதி செய்து கோவையில் உள்ள கிரைண்டர் சங்கத்திடம் அனைத்து ஆர்டர்களையும் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.