தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு நினைவு நாள் அரசு விழாவாக நடத்தப்படுமா?

தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று 16 வயதிலேயே உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மையின் நூற்றாண்டு நினைவு நாளை (பிப். 22,2014) அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு நினைவு நாள் அரசு விழாவாக நடத்தப்படுமா?

தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று 16 வயதிலேயே உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மையின் நூற்றாண்டு நினைவு நாளை (பிப். 22,2014) அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர் நாகை மாவட்டம், தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் 1898-ம் ஆண்டு முனுசாமி முதலியார் - மங்களம் தம்பதிக்கு மகளாக வள்ளியம்மை பிறந்தார். (பிறந்த தேதி குறித்த தெளிவான வரலாற்று குறிப்பு கிடைக்கவில்லை).

காந்தி நடத்திய போராட்டத்தில் 15 வயதேயான வள்ளியம்மை பங்கேற்று 1913-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி கைது செய்யப்பட்டு, தனது தாயாருடன் சிறையில் அடைக்கப்பட்டார். மாரிட்ஸ்பார்க் சிறைவாசம் அவரை கடுமையான நோய்க்கு உள்ளாக்கியது. சிறைவாசத்தால் வள்ளியம்மை உடல் நலம் குன்றியது. 1914-ம் ஆண்டு பிப். 22-ம் தேதி 16 வயதில் அவர் மரணம் அடைந்தார்.

சேவை என்னும் கோவிலை அவள் தனது கரங்களினாலேயே எழுப்பினாள். அவளுடைய மாண்புமிக்க உருவம் பலர் இதயத்தில் நிரந்தரமாக பதிந்து இருக்கிறது. இந்தியா உள்ளவரையில் தென்னாப்பிரிக்க சத்தியாகிரக சரித்திரத்தில் வள்ளியம்மாவின் பெயரும் நீங்கா இடம் பெற்றிருக்கும் என்று காந்தி குறிப்பிட்டார்.

வள்ளியம்மையின் நினைவைப் போற்றும் வகையில் தில்லையாடியில் தமிழக அரசு நினைவு மண்டபம் ஒன்றை அமைத்துள்ளது. வள்ளியம்மையின் உருவச் சிலை மற்றும் புகைப்படங்கள் காட்சி பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு வள்ளியம்மையின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப். 22-ம் தேதி அப்பகுதியை சார்ந்தோரால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று இங்கு அரசு விழா நடத்தப்பட்டு வந்தது. ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த விழா நிறுத்தப்பட்டுவிட்டது.

ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக என பல பரிமாணத்தில் பெருமை சேர்த்ததோடு மகாத்மா காந்தியாலும் போற்றப்பட்ட வள்ளியம்மைக்கு நிகழாண்டு நூற்றாண்டு நினைவு நாள் வருவதால், அந்த நாளில் தில்லையாடியில் சிறப்பான வகையில் அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி வாழ் மக்களிடம் எழுந்துள்ளது.

மேலும், வள்ளியம்மை நினைவு மண்டபமும் அதன் எதிரில் மகாத்மா காந்தி அமர்ந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியும் போதிய பராமரிப்பின்றி உள்ளன. இவற்றையும் சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் முன்வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com