எம்.எஸ். விஸ்வநாதன் (1928– 2015) - மரணமில்லா மகா கலைஞன்

தமிழர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள். அதிலும் கலைத் துறைகளில் அவர்களுடைய ரசனை கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு
Published on
Updated on
3 min read

தமிழர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள். அதிலும் கலைத் துறைகளில் அவர்களுடைய ரசனை கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு வெறித்தனமானது. உயிரையும் துச்சமாக மதித்து அறுபது அடி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களை இந்தப் பூமிப் பந்தில் வேறு எங்கே காண முடியும்?

எம்.கே.தியாகராஜ பாகவதர் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதுவதற்காக அந்நாளைய பத்திரிகைகளை ஆய்வு செய்யும்போது படித்திருக்கிறேன். பாகவதரைப் பார்க்க மரங்களில் இலைகளே தெரியாத அளவுக்குத் தொற்றிக் கொண்டிருப்பார்களாம் மக்கள். மொட்டை மாடிகளிலும் மக்கள் கூட்டம் பிதுங்கித் தள்ளும். அப்படி ஒரு கூட்டத்தில் மின்கம்பம் ஒன்றில் நின்று அவர் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் மின் அதிர்ச்சியால் தாக்குண்டு இறந்துபோன செய்தியைப் படித்தேன். இசையை வெறித்தனமாக இப்படி ரசிப்பது உலகம் முழுக்கவும் காணக்கூடியதே எனினும், தமிழனின் விசேஷ குணம் என்னவெனில் வரலாற்றை மறப்பது. 

மனிதனை முழுமையாகத் தன் வசப்படுத்தக்கூடிய திறன் கொண்ட ஒரே கலை என்று இசையைப் பற்றிச் சொல்லலாம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்ஸனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நான் கண்ணீர் விட்டுக் கதறிவிட்டேன். சில நெருக்கமான உறவுகளின் மரணத்தின்போதுகூட கலங்காத சித்தம் கொண்ட நான், மற்ற மனிதர்களின் முன்னால் கண்ணீர்விட்டது அதுவே முதலும் கடைசியும். காரணம், இசை.  மனிதன் கருவறையில் உருவாகும் தருணத்திலிருந்து கல்லறைக்குள் சென்ற பின்னரும்கூட அவனுடன் பயணிக்கும் ஒரே துணை இசையாகத்தான் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இசைக்கு மனிதன் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தவனாக இருக்கிறான்.

பாப் மார்லி பற்றி இசைகேடாக ஒரு இசையமைப்பாளர்  பேட்டி அளித்தபோது அந்த இசையமைப்பாளரை நான் விமர்சித்து எழுதினேன். அதன் விளைவு படுபயங்கரமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், தேன்கூட்டில் கல் எறிந்தவனின் நிலைக்கு ஆளானேன். அந்த அளவுக்கு நான் செல்லும் இடங்களிலெல்லாம் அது ஒன்றையே கேட்டுக் கேட்டு என்னைத் துளைத்து எடுத்துவிட்டார்கள். வாசகர் சந்திப்புகளில் பல மணி நேரங்களை அந்த ஒரு விஷயமே எடுத்துக்கொண்டதுண்டு. அந்த அளவுக்கு இசை ஒரு மனிதனை, ஒரு சமூகத்தை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதிலும் தமிழ்ச் சமூகம் வாசிக்கும் பழக்கத்துக்கு இன்னும் வந்தடையாமல் இருப்பதால், தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமாவாக இருக்கிறது. சினிமாவிலும் இசைக்குத்தான் பிரதான இடம்.

தொலைக்காட்சி வருவதற்கு முன்பு ஒட்டுமொத்தத் தமிழ் இனமே, ரேடியோ சிலோனில் கே.வி.மகாதேவனையும் அவரைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதனையும்தான் கேட்டுக்கொண்டிருந்தது. இரவு நேரத்தில் பத்து மணிக்கு மேல் வீட்டுத் திண்ணையில் பாயைப் போட்டு “அமைதியான நதியினிலே ஓடம்” (ஆண்டவன் கட்டளை) என்ற பாடலைக் கேட்காத ஒரு தமிழன் அந்நாளில் இருந்திருக்க முடியுமா? சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன், வாழ்க்கைப் படகு, பஞ்சவர்ணக் கிளி (தமிழுக்கும் அமுதென்று பேர்), எங்க வீட்டுப் பிள்ளை, பணத்தோட்டம், பாகப்பிரிவினை, கை கொடுத்த தெய்வம், பணம் படைத்தவன், பார்த்தால் பசி தீரும், பாவ மன்னிப்பு, பாலும் பழமும், புதிய பறவை என்று இப்படி நூற்றுக்கணக்கான படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தால் அழியாத காவியப் பாடல்களை உருவாக்கினார். (வண்ணதாசன் “சில பழைய பாடல்கள்” என்று ஒரு சிறுகதையே எழுதியிருக்கிறார்).

எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி ஏற்கெனவே ஏராளமாக எழுதியிருக்கிறேன். முக்கியமாக, தமிழர்கள் வரலாற்று உணர்வு இல்லாமல் எப்போதும் தற்காலத்திலேயே வாழ்ந்து தற்காலமே முக்காலமும் என்று நிரூபிக்க முயலும்போதெல்லாம் எம்.எஸ்.வி. பற்றி எழுதியிருக்கிறேன். கிட்டப்பா, பாபநாசம் சிவன், எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா தொடங்கி தமிழ் வெகுஜன இசையில் பெரும் மேதைகளும் கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஜி.ராமநாதனுக்குப் பிறகு வந்த இரண்டு மேதைகள் கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஆவர். மற்ற இசை அமைப்பாளர்களிடம் இருந்து எம்.எஸ்.வி. வேறுபடும் இடம் எதுவென்றால், தொடர்ச்சி அறுபடாமலே பல ஆண்டுகள் மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்தபடியே இருந்தார். ஆண்டுக்குப் பதினைந்திலிருந்து இருபது படங்கள் வீதம் (சில ஆண்டுகளில் இருபதுக்கும் மேல்) சுமார் இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவின் சிகரத்தில் இருந்தவர் எம்.எஸ்.வி.

ஒரு படத்துக்காக இசை அமைப்பதற்கு இப்போதெல்லாம் எத்தனை எத்தனையோ வசதிகள் இருக்கின்றன. பாங்காக், லண்டன் என்றெல்லாம் போய் மாதக்கணக்கில் தங்கி இசை அமைக்கிறார்கள். ஆனாலும் ஒரு படத்தில் ஒரு பாடல் ஹிட் ஆவதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் ஒரே படத்தில் ஐந்தாறு பாடல்கள் சூப்பர் ஹிட் ஆவதெல்லாம் அந்நாளில் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது. ஆனந்த ஜோதி, கர்ணன் என்ற இரண்டு படங்களை மட்டும் இங்கே உதாரணமாகச் சொல்லலாம். அவற்றில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் காலத்தால் அழியாதவை.

ஒருமுறை என்னிடம் ஒரு இயக்குனர் சொன்னார், நினைக்கத் தெரிந்த மனமே (ஆனந்த ஜோதி) என்ற ஒரே ஒரு பாடலுக்குத் தமிழ் சினிமாவில் வந்த அத்தனை பாடல்களையும் ஒன்று சேர்த்தாலும் ஈடாகாது என்று. உண்மைதான் என்றே எனக்கும் தோன்றுகிறது.

தமிழர்களின் காதலை, பாசத்தை, துக்கத்தை, துயரத்தை, கொண்டாட்டத்தை, வீரத்தை, வேதனையை, மகிழ்ச்சியை, தனிமையை, பக்தியை, கேலியை, கிண்டலை இசையாக மாற்றிக்கொடுத்த மேதையான எம்.எஸ்.வி.யின் பூத உடல் இன்று மறைந்துபோனாலும் அவரது இசை, தமிழ் உள்ளளவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில். எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற மகா கலைஞனுக்கு மரணமே இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com