உதயமார்த்தாண்டத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் சரணாலயம் வெளிநாட்டுப் பறவைகளின் சங்கமமாகத் திகழ்கிறது.


திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் சரணாலயம் வெளிநாட்டுப் பறவைகளின் சங்கமமாகத் திகழ்கிறது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை வழித்தடத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 18 கி.மீ. தொலைவில் உள்ள உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் 110 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், நாகை மாவட்டம், கோடியக்கரை, திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம், தஞ்சை மாவட்டம், வடுவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சரணாலயங்களில் சைபீரியா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டுப் பறவைகளும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பறவைகளும் குவிந்த வண்ணமிருக்கும்.
இந்த வரிசையில் தற்போது உதயமார்த்தாண்டபுரம் சரணாலயமும் இணைந்துள்ளது.
பல்வேறு அரியவகைப் பறவை இனங்கள் சமூக விரோதிகளால் உணவுக்காக வேட்டையாடப்பட்டு, அழிந்துவரும் நிலை ஏற்பட்டதால், பறவை இனங்களைப் பாதுகாக்கும் வகையில், சரணாலயங்ளை அமைத்து, வனத் துறை மூலம் அரசு பாதுகாத்து வருகிறது.
இதற்காக, வனத் துறையினருக்கு உரிய அதிகாரத்துடன் நவீன ஆயுதங்களும், வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வனத் துறை சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக சரணாலயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் தமிழகத்தில் உள்ள சரணாலயங்களுக்கு வரத் தொடங்கும் பறவைகள், கோடைகாலம் ஆரம்பிக்கும் மார்ச் மாதம் வரை தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.
பின்னர், தங்களது நாடுகளுக்குத் திரும்புகின்றன.
உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்தில் மயில்கால் கோழி, சின்ன வெள்ளைக்கொக்கு, நாமக்கோழி, மடையான், வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தைக்கொத்தி நாரை, நீளவால் இலைக் கோழி, சிறிய நீர்காகம், பாம்பு தாரா, சாம்பல் நாரை, பெரிய வெண்கொக்கு, வக்கா, கறுப்பு அரிவாள் மூக்கன், சிறு ஆலா, தாலைக்கோழி, பவழக்கால் நாரை, கரும்புள்ளி மீன்கொத்தி, வெள்ளைநெஞ்சு மீன்கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகைப் பறவைகள் சங்கமமாகி உள்ளன.
இந்த அரியவகைப் பறவைகளை அதிகாலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்க்கலாம். இந்தச் சரணாலயத்தில் பார்வையாளர்கள் பறவைகளைப் பார்த்து ரசிக்கும் வகையில் கண்காணிப்புக் கோபுரமும், ஓய்வறையும், தொலைநோக்கி வசதியும், சரணாயலயத்தைச் சுற்றிக் காட்ட வனக் காவலர்களும், வேட்டைத் தடுப்புக் காவலர்களும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...