18 மாதங்களாக ஊதியம் இல்லை!

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் 572 கேமரா ஆபரேட்டர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
18 மாதங்களாக ஊதியம் இல்லை!
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் 572 கேமரா ஆபரேட்டர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் 572 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவை அனைத்தும் 2013-இல் கணினிமயமாக்கப்பட்டன. கணினிகளை இயக்க ஒவ்வொரு சார்-பதிவாளர் அலுவலகத்துக்கும் ஒருவர் வீதம் 572 கேமரா ஆபரேட்டர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
லா பிராவிடன்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்ட கேமரா ஆபரேட்டர்களுக்கு மாதம் ரூ. 4,360 ஊதியத்தை தனியார் நிறுவனமே வழங்கி வந்தது. பத்திரங்களைப் பதிவு செய்ய வருபவர்கள் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குள் வந்து, பத்திரங்களைப் பதிவு செய்துவிட்டு வெளியே செல்லும் வரையிலான அனைத்துக் காட்சிகளையும் விடியோ பதிவு செய்து தருவதுதான் கேமரா ஆபரேட்டர்களின் பணி.
தமிழக பத்திரப் பதிவுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை தனியார் நிறுவனம் முறையாகச் செயல்படுத்தவில்லை.
18 மாதங்களாக ஊதியம் இல்லை: பணியமர்த்தப்பட்ட கேமரா ஆபரேட்டர்களுக்கு ரூ. 4,360 ஊதியம் என்று நிர்ணயிக்கப்பட்டாலும், பிடித்தம் போக மாதம் ரூ. 3,700 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஊதியமும் 2015, மே மாதம் முதல் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் தனியார் நிறுவன உயர் அதிகாரிகளிடம் கேமரா ஆபரேட்டர்கள் ஊதியத்தைக் கேட்டாலும், "அடுத்த மாதம் வரும்; 2 மாதங்கள் காத்திருங்கள்' என்று சொல்லியே 18 மாதங்களைக் கடத்திவிட்டனர்.
ஒப்பந்தமும் முடிந்தது: 572 பேரும் 2013-ஆம் ஆண்டு, செப்டம்பரில் மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். அதன்படி பார்த்தால், 2016 செப்டம்பருடன் ஒப்பந்தம் முடிந்துவிட்டது.
இதுகுறித்துக் கேட்டபோது, மறு உத்தரவு வரும் வரை வேலை செய்யுங்கள் என்று தனியார் நிறுவனத்தினர் கூறிவிட்டனராம்.
இதற்கிடையே, "பல மாதங்களாக ஊதியம் இல்லாமல் நாங்கள் வேலை செய்கிறோம். ஊதியம் தந்தால் தொடர்ந்து வேலை செய்கிறோம். இல்லாவிட்டால், நாங்கள் பணியில் இருந்து விலகிக் கொள்கிறோம்' என்று சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாலான கேமரா ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து, அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கான காசோலை அனுப்பிவைக்கப்பட்டது. அவை அனைத்தும் பணம் இல்லாமல் திரும்பிவந்துவிட்டன.
இதுகுறித்து திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட சார்-பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் கேமரா ஆபரேட்டர்கள் கூறியதாவது:
காலை முதல் இரவு வரை விடுமுறைகூட கிடைக்காமல் நாங்கள் வேலை செய்கிறோம். எங்களைப் பணி நியமனம் செய்த தனியார் நிறுவனம் முதலில் முறையாக ஊதியம் வழங்கியது.
2015, மே மாதம் முதல் ஊதியம் வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தொகுப்பூதியமாக இருந்தால்கூட மாதம் ரூ. 8 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், எங்களுக்கு ரூ. 4,360 மட்டுமே ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியமும் 18 மாதங்களாக வழங்கப்படாததால் மிகவும் தவித்து வருகிறோம். அன்றாடச் செலவுகளுக்குக்கூட கடன் வாங்கி, கஷ்டப்பட்டு வருகிறோம் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com