புதுச்சேரி: 5 நாள்களுக்கு பின்னர் என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் புதன்கிழமை சட்டப்பேரவைக்கு வந்தனர். எனினும் பணிநீக்கப்பட்ட தினக்கூலி ஊழியர்களை மீண்டும் நியமிக்க வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 24-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கடந்த 29-ம் தேதி ரூ.6665 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் பணிநீக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்களை மீண்டும் நியமிக்க வலியுறுத்தி பேரவைத் தலைவர் இருக்கை அருகே முற்றுகையிட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறக்கணித்து வநதனர். முதல்வர் நாராயணசாமி, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், திமுக எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால் பணிநீக்கப்பட்ட தினக்கூலி ஊழியர்களை மீண்டும் பணி அமர்த்தினால் தான் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்போம் என அக்கட்சியின் கொறடா ஜெயபால் பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் 5 நாள்களுக்கு பின்னர் புதன்கிழமை மீண்டும் பேரவை நடவடிக்கைகளில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி வரவில்லை. அசோக் ஆனந்து, ஜெயபால், சுகுமாறன், கோபிகா, சந்திரபிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரவை தொடங்கியதும், அசோக் ஆனந்து எம்.எல்.ஏ எழுந்து அப்பாவிகளான 3000 இளைஞர்களை காங்கிரஸ் அரசு பணிநீக்கம் செய்து விட்டது. அவர்களை மீண்டும் பணி அமர்த்தாமல் ஏமாற்றி வருகிறது என பேசினார்.
இதற்கு கொறடா அனந்தராமன், அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் பணம் வாங்கிக் கொண்டு இளைஞர்களை ஏமாற்றி பணி அமர்த்தினர். இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
பின்னர் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.