ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை: தினகரன் குற்றச்சாட்டு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன்


சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
அ.தி.மு.க (அம்மா) அணி சார்பில் டி.டி.வி. தினகரன், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் அதிரடிச் சோதனை நடத்தி பணப் பட்டுவாடாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக விக்ரம் பாத்ரா என்கிற புதிய அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நடிகர் சரத்குமார், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களிடமிருந்து ரூ.3 கோடிக்கும் மேல் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆவணத்தில் சில அமைச்சர்கள் பெயரும் இடம் பெற்றிருந்தன.
அதிமுக சசிகலா அணி வேட்பாளர், அதாவது அதிமுக (அம்மா) அணியின் சார்பில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ரூ.89 கோடி வரை செலவிடப்பட்டதாக சோதனையில் தெரியவந்தது என வருமான வரித் துறையால், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மொத்தம் உள்ள 2.6 லட்சம் வாக்காளர்களில் 85 சதவீதம் பேருக்கு தலா ரூ. 4,000 வீதம் ரூ.89 கோடி ஒதுக்கப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் கட்சியின் சில அமைச்சர்கள், மூத்த தலைவர்களிடம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பிரித்துத் தரப்பட்டிருந்ததும் வருமான வரி கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை தில்லியில் தேர்தல் ஆணையத்திடம் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இது குறித்து சென்னை அடையாறில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:
வேட்பாளர்களை தவிர அனைத்து அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றி விட்டதாக சாடினார். பொறியாளர், காவல்துறை அதிகாரிகள் என ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி வேண்டுமென்றே அசாதாரண சூழலை உருவாக்கியது.
தமது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதாலேயே, திட்டமிட்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டிய தினகரன், இது ஜனநாயக படுகொலை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில் வருமான வரித்துறையினர் தேவையின்றி சோதனை நடத்தியது என கூறியுள்ளார். அதிமுக என்ற இயக்கத்தை அழிக்க பலரும் சதி செய்வதாக குறிப்பிட்ட தினகரன், யாரை கண்டும் எங்களுக்கு பயமில்லை என்றார். எவ்வித முகாந்திரமோ, தேவையோ இல்லாமல் தான் இந்த இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...