அதிமுகவினர் தேர்தலைச் சந்திக்கத் தயாரா?: திமுக கொறடா சவால்
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரா என்று திமுக கொறடா அர.சக்கரபாணி பேரவையில் சவால் விடுத்தார்.


அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரா என்று திமுக கொறடா அர.சக்கரபாணி பேரவையில் சவால் விடுத்தார்.
வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ரத்தினசபாபதி (அறந்தாங்கி) பேசியது: பேரவையில் திமுக உறுப்பினர் ராமச்சந்திரன் பேசும்போது, நெருக்கடி காலத்தில் கருணாநிதி தனது மகனான ஸ்டாலினைக் காவல் துறையிடம் அனுப்பி வைத்ததாகக் கூறினார். அப்படி அனுப்பி வைக்க காரணமான ஆட்சி (காங்கிரஸ்) எதுவோ, அந்தக் கட்சியுடன்தான் இப்போது திமுக கூட்டணி வைத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அவரது மகனை முதல்வராக்கிவிட்டார். ஸ்டாலினை கருணாநிதி கடைசி வரை முதல்வராக்கவில்லை எனவும் ராமச்சந்திரன் பேரவையில் குறிப்பிட்டார். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? அது திமுகவின் உள்கட்சிப் பிரச்னை என்றார்.
அதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பேரவை மாற்றுத் தலைவர் நரசிம்மன் பேசுவதற்கு அனுமதி தர மறுத்தார். இதனால், திமுகவினர் எழுந்து தொடர்ந்து குரல் கொடுத்தவாறே நின்றிருந்தனர். பின்னர், திமுக கொறடா அர.சக்கரபாணி பேச அனுமதி தரப்பட்டது.
அர.சக்கரபாணி: ஆட்சியைக் கலைப்போம் என்றெல்லாம் திமுக எப்போதும் கூறவில்லை. 122 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பெரும்பான்மை ஆட்சி நடத்துவதாக கூறுகிறீர்கள்.
இதில் எத்தனை பிரிவுகள் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் உங்கள் பக்கம் இருப்பதாகக் கருதினால், அனைத்து உறுப்பினர்களும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தேர்தலைச் சந்திக்கத் தயாரா என்றார்.
அதற்கு அவை முன்னவரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான செங்கோட்டையன் கூறியது: இந்த பேரவையில் உள்ள யாரும் அதற்குத் தயாராக இல்லை. தற்போது நடைபெறும் ஆட்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருக்கிறது. இதில் வேறு கருத்துக்கு இடமில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...