/

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது சாத்தியமே

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது சாத்தியமானது என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:22 pm

DIN

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது சாத்தியமானது என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை புதன்கிழமை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது என்பது சாத்தியமானதுதான். இரு அணிகளும் இணைய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இணையவில்லை என்றால், ஆக.4- ஆம் தேதிக்குப் பிறகு இரு அணிகளையும் இணைப்பது குறித்து நானே முடிவெடுப்பேன்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் உத்தரவின் பேரிலே நான் ஆதரவு அளிப்பதாக அறிவித்தேன். மும்பையில் ஆளுநரைச் சந்திக்கச் செல்லவில்லை. அங்குள்ள சாய்பாபா கோயிலுக்கு வழிபடச் சென்றேன். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை உறவினர் என்ற முறையில் தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் அவரைச் சந்திக்கவில்லை. எனக்கும், திவாகரனுக்கும் ஏற்பட்ட தகராறில் சமாதானம் செய்து வைத்ததாக நடராஜன் கூறியுள்ளதை ஏற்க முடியாது.
பிப். 5- ஆம் தேதி பெங்களூரு சிறையில் பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்தித்தபோது திவாகரனும் வந்திருந்தார். நானும், அவரும் சந்தித்துக் கொண்டோம். எங்களிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. எங்களை யாரும் சமாதானம் செய்து வைக்கவில்லை என்றார்.
பேட்டியின்போது, அதிமுக மாநிலச் செயலாளர் வா.புகழேந்தி, எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன், முருகையா, வெற்றிவேல், தங்கதுரை, முன்னாள் எம்.பி. ரிதீஷ், முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.