அதிமுகவுக்கு உரிமை கோரும் மூன்று அணிகள்... மலைபோல குவிக்கப்பட்ட பிரமாண பத்திரங்கள்.. திணறும் தேர்தல் ஆணையம்...
அதிமுக தலைமைக்கும் அக்கட்சியின் இரட்டை இலைச் சின்னத்துக்கும் உரிமை கோரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, முன்னாள்


அதிமுக தலைமைக்கும் அக்கட்சியின் இரட்டை இலைச் சின்னத்துக்கும் உரிமை கோரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணி என மூன்று அணியும் மலைபோல குவித்திருக்கும் லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை எவ்வாறு சரிபார்ப்பது என்ற மலைப்பிலும் குழப்பத்திலும் தேர்தல் ஆணையம் உள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அத்தொகுதியில் ஆளும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் விருப்பம் தெரிவித்தார். இதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கம் வகிக்கும் சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரனும் அத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, இந்த இரு அணியினரும் அதிமுக என்ற பெயரையும், அக்கட்சியின் "இரட்டை இலை' தேர்தல் சின்னத்தையும் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. மேலும், இரு தரப்பும் கட்சித் தலைமைக்கு உரிமை கோரும் ஆவணங்களை நேற்று ஜூன் 16-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று இரு தரப்புக்கும் ஆணையம் உத்தரவிட்டது.
இதன்படி பன்னீர்செல்வம் தலைமையை ஆதரித்து லட்சக்கணக்கான அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 16) நிலவரப்படி மொத்தம் 3,84,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு போட்டியாக சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அங்கம் வகிக்கும் அணியைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி அணி சார்பில் நேற்றைய வெள்ளிக்கிழமை நிலவரப்படி 6,82,805 பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணங்கள் லாரிகள் மூலம் ஒவ்வொரு முறையும் கொண்டு வரப்பட்டன. இதனால், அவற்றைப் பராமரிப்பதற்காக தனி அறை தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரமாண பத்திரங்கள் ஒவ்வொன்றிலும், மாவட்ட வாரியாக அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் சுமார் 500 முதல் 1,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கிடையே, டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் 52,000 பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இந்த பிரமாண பத்திரம் ஒவ்வொன்றும் ரூ.20 மதிப்புடையது.
இந்நிலையில், 2 அணியாக இருந்த அதிமுக 3 அணியாக வந்து பிரமாண பத்திரங்களை லாரி, லாரியாக கொண்டு வந்து தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டதைப் பார்த்து தேர்தல் ஆணையம் அதிகாரிகள் ஏன்தான் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய சொன்னோமோ? என்று எண்ணுமளவுக்கு திகைத்து போய் உள்ளனர்.
இதனிடையே மூன்று அணிகளும் தாக்கல் செய்துள்ள பத்திரங்களின் செலவு தொகை தலையை சுற்ற வைக்கிறது. அதாவது அதிமுக (அம்மா) அணியின் சார்பில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 805 பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கான பத்திரச்செலவு மட்டும் ரூ.1 கோடியே 36 லட்சத்து 56 ஆயிரத்து 100 ஆகும்.
அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் 3,84,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பத்திரச்செலவு மட்டும் ரூ.76 லட்சம் ஆகும்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் 52,000 பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான பத்திரச்செலவு மட்டும் தீபா அணிக்கான பத்திரச் செலவு ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் என தெரியவந்துள்ளது.
மேலும், தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களை எந்த அடிப்படையில் ஆராய்வது என்ற குழப்பம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை சரிபார்க்க குழுக்களை அமைப்பதா அல்லது வேறு உத்திகளை கையாளுவதா என்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் வரும் வாரங்களில் முடிவு செய்யலாம்.
பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளடக்க குறிப்பை ஆராய்ந்து, அதில் சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரமாண பத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.
பிரமாண பத்திரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அணியினரை நேரில் அழைத்து வாதம் செய்ய வைத்து, அதன்பிறகே இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கலாம்.
"வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரின் தலைமைக்கு எதிராக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இ.மதுசூதனன் ஆகியோர் அளித்த மனுவின் பேரில் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் 52,000 பிரமாண பத்திரங்களை எப்படி சரிபார்ப்பது, அவர்களையும் நேரில் அழைத்து வாதத்தில் கலந்துகொள்ள என்ன செய்யமுடியுமா? என்ற குழப்பத்தில் உள்ளது தேர்தல் ஆணையம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...