அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இரட்டை இலை சின்னம் முடக்கம்

ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியின் பெயரையும் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்,

News image
Updated On :23 மார்ச் 2017, 4:22 am

தினமணி

ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியின் பெயரையும் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அதிமுக தாற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலா ஆகியோர் பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை இரவு உத்தரவிட்டது.
இது தொடர்பாக புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரு தப்பினரிடமும் நடத்திய விசாரணை முடிவில் தனது உத்தரவை இரவு 11.15 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன் விவரம்:
அதிமுக தலைமை மற்றும் அக்கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலைக்கு உரிமைக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பு, வி.கே. சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய ஆவணங்களின் தொகுப்பை சமர்பித்துள்ளனர். அவற்றின் நம்பகத்தன்மை, உள்ளடக்கம் போன்றவற்றை விரிவாக ஆராய தேர்தல் ஆணையம் விரும்புகிறது.
இந்நிலையில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வியாழக்கிழமை (மார்ச் 23) கடைசி நாளாகும். எனவே போதிய அவகாசம் இல்லாததால் 'அதிமுக' என்ற கட்சி பெயரையும் 'இரட்டை இலை' என்ற தேர்தல் சின்னத்தையும் இருதரப்பும் பயன்படுத்தாதவாறு தாற்காலிகமாக தேர்தல் ஆணையம் முடக்கி வைக்கிறது.
இரு தரப்பும் அதிமுக என்ற பெயருடன் தங்கள் அணிகளுக்கான அடையாளத்தை குறிக்கும் வகையில் வேறு பெயரையும், வேறு சின்னத்தையும் தங்களுக்கு ஒதுக்கி தருமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வியாழக்கிழமை காலை 10.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்சித் தலைமை உள்ளிட்ட பிற விவரங்கள் குறித்து ஏப்ரல் 17ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக 'இரட்டை இலை' சின்னத்தை ஒதுக்கும் விவகாரத்தில் அதிமுகவின் தாற்காலிகப் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் தரப்பிடமும், தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மதுசூதனன் தரப்பிடமும் தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை விசாரணை நடத்தியது.
அதிமுக தலைமை, கட்சி சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கொண்டாடி மனு அளித்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் தரப்பு அணி (மனுதாரர்கள்) மற்றும் வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் தரப்பு அணி (எதிர்மனுதாரர்கள்) ஆகியவற்றிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஏ.கே. ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் புதன்கிழமை காலை 10.45 மணிக்கு விசாரணையைத் தொடங்கினர்.
இரு அணிகள் வாதம்: ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன், பி. சீனிவாசன் ஆகியோர் ஆஜராகினர்.
சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் மோகன் பராசரன், அரிமா சுந்தரம், சல்மான் குர்ஷித், வீரப்ப மொய்லி ஆகியோர் ஆஜராகினர். மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, எம்.பி.க்கள் பி.வேணுகோபால், நவநீதகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், எம்எல்ஏ ஐ.எஸ். இன்பதுரை உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரத்தை பின்னர் விசாரிப்பதாகவும் தேர்தல் சின்னம் ஒதுக்க உரிமை கொண்டாடும் வாதங்களை இரு தரப்பும் முன்வைக்குமாறும் தேர்தல் ஆணையர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, இரு தரப்பினரும் தலா மூன்று மணி நேரம் வாதங்களை முன்வைத்தனர். மாலை 5.30 மணி வரை இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட பிறகு, அவற்றின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் இருந்து புறப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் முன்வைத்த வாதங்களின் சட்ட அடிப்படையிலான விவகாரங்கள், தேர்தல் சின்னம் ஒதுக்கீடு நடைமுறைகள் ஆகியவை குறித்து ஆணையத்தின் சட்டப் பிரிவுச் செயலர், முதன்மைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் தேர்தல் ஆணை
யர்கள் ஆலோசனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.