ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருந்து, மாநில அரசின் துணையை இப்போது கோரியிருக்கிறது என்பதே இந்தப் பத்திரிக்கைச் செய்தியை படிக்கும் போது தெரிய வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே மாநில அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உள்ள விவரங்கள் குறித்து இதுவரை இங்குள்ள அதிமுக அரசு வெளியிடவில்லை. இத்திட்டம் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது கூட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் கடிதம் குறித்து விளக்கிட முன்வரவில்லை.
ஆகவே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் இருக்கும் விவரங்களை ஒளிவுமறைவின்றி மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதேநேரத்தில், “இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுக்காது”, என்று ஏற்கனவே முதல்வர் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசும் பிடிவாதமாக இருக்காமல், விவசாயிகளின் கவலையையும், எதிர்காலத்தில் அந்தப்பகுதியில் விவசாயமே அழிந்துவிடும் என்ற மக்களின் அச்சத்தையும் கவனத்தில் கொண்டு, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.