/

2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் காரில் கடத்தல்: விரட்டிப் பிடித்த போலீஸார்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் புதிய இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் கடத்திய கும்பலை போலீஸார் புதன்கிழமை விரட்டிப் பிடித்தனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:26 pm

DIN

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் புதிய இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் கடத்திய கும்பலை போலீஸார் புதன்கிழமை விரட்டிப் பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அருகே உள்ள திருப்போரூர், கேளம்பாக்கம், சிறுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஒரு கும்பல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் வேலையில் ஈடுபட்டதாகவும், அந்தக் கும்பல் ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக தப்பிச் செல்வதாகவும் போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் கள்ளநோட்டு கும்பலைப் பிடிக்க போலீஸார், கானத்தூர், அக்கரை, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், பாலவாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சாலைகளில் தடுப்புகளை அமைத்து, வாகன சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அக்கரையில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு காரை போலீஸார் மறித்தனர்.
ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீஸார் அந்தக் காரை விரட்டிச் சென்றனர். அதேவேளையில், அந்த காரின் எண்ணையும், அடையாளங்களையும் வாக்கி டாக்கி மூலம் தெரிவித்து, அதனை மடக்கி பிடிக்கும்படி பிற போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பாலவாக்கத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அந்தக் காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
இச்சோதனையில் அந்த காரில் 18 புதிய இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பதும், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள புதிய இரண்டாயிரம் கள்ளநோட்டுகளை மாற்றியிருப்பதும் தெரியவந்தது. அந்த ரூபாய் நோட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, அந்தக் காரில் வந்த இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் அவர்கள், அம்பத்தூர் அயனப்பாக்கத்தைச் சேர்ந்த ஜாபர் உசேன் (45), ஆவடியைச் சேர்ந்த ஜானி (40) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் அவர்களிடம் போலீஸார், கள்ளநோட்டுகளை எங்கிருந்து வாங்கினார்கள், எப்படி மாற்றினார்கள் என விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.