/

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் மருத்துவக் கல்வி இயக்கத்தினால் இன்று வெளியிடப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:28 pm

DIN

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் மருத்துவக் கல்வி இயக்கத்தினால் இன்று வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில், அரசின் கிராமபுற மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு எம்.டி. மற்றும் எம்.எஸ். உள்ளிட்ட மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலானது முதுகலை கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக புதிய விதிமுறை ஒன்றை வெளியிட்டது. அதன்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான 'நீட்' தகுதி தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு, கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டது.

அதே நேரம் தமிழக அரசு நீட் தேர்வில் அரசு டாக்டர்கள் பெற்ற மதிப்பெண்ணை, 90 மதிப்பெண்ணாக கணக்கிட்டு, மலைக்கிராமம் உள்ளிட்ட கடினமாக பகுதிகளில் டாக்டராக பணியாற்றியதற்கு, அதிகபட்சம் 10 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்து, 2017-18-ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புக் கான விளக்க குறிப்பேட்டை வெளியிட்டுள்ளது.

இதை எதிர்த்து டாக்டர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ‘முதுகலை மருத்துவ படிப்பில், இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்துள்ள விதிகளின் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். தமிழக அரசு 10 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்து வெளியிட்டுள்ள விளக்க குறிப்பேடு செல்லாது’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து டாக்டர்கள் பலர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் விசாரித்து கடந்த 3-ந் தேதி அன்று மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்கள்.

நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, 3-வது நீதிபதியாக, நீதிபதி எம்.சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். அவர் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் முதுகலை மருத்துவ படிப்பில், இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்துள்ள விதிகளின் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தற்போது மூன்று நீதிபதிகளில், இரண்டு பேர் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படிதான் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருப்பதால், இந்த விதிகளின்படி தான் தமிழக அரசு மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கிராமபுறங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்கனவே பெற்று வந்த இடஒதுக்கீடு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை மருத்துவக் கல்வி இயக்கம் இன்று காலி வெளியிட்டது. 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலானது http://www.tnhealth.org  என்ற இணையதளத்தில் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.