/

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் நண்பர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நண்பர் கே.ஆர்.சுப்ரமணியம் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அவர் எழுதிய 4 பக்கக் கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

News image
இறந்த ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்திய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில்.
Updated On :29 ஜனவரி 2024, 2:30 pm

DIN

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நண்பர் கே.ஆர்.சுப்ரமணியம் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அவர் எழுதிய 4 பக்கக் கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடிதத்தில் உள்ள கையெழுத்து சுப்ரமணியத்துடையதுதானா? எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா? எனவும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்-மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் கே.ஆர். சுப்ரமணியம் (58). அரசு கட்டட ஒப்பந்ததாரரான இவர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சுப்ரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இருமுறை சென்னை வருமான வரித் துறை அலுவலகத்துக்கு சுப்ரமணியம் விசாரணைக்குச் சென்று வந்தார். மூன்றாவது விசாரணைக்குச் செல்ல வேண்டிய சூழலில், கடந்த 8-ஆம் தேதி மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது விவசாயத் தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றுப் பகுதியில் விஷம் இருந்ததால், தற்கொலையாக இருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகித்தனர்.
இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கடந்த 10-ஆம் தேதி சுப்ரமணியம் இறப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த மோகனூர் காவல் ஆய்வாளர் இளங்கோ மாற்றப்பட்டு, நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதம்: இந்த நிலையில், சுப்ரமணியம் இறப்பதற்கு முன்னர் எழுதியதாகக் கூறப்படும் 4 பக்கக் கடிதம் கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இதில், அவர் பிறந்த தேதி, கல்வி, வேலைபார்த்த இடம் உள்பட பிற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கடிதம் 6-ஆம் தேதி எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கையெழுத்து பரிசோதனை: இந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர், கடிதத்தில் உள்ள கையெழுத்து உண்மையில் சுப்ரமணியத்துடையதா? என அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கையெழுத்து தனது தந்தை சுப்ரமணியத்துடையதுதான் என அவரது மகள் அபிராமி கூறிதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
எனினும், கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் சுப்ரமணியம் எழுதிய பிற ஆவணங்களில் உள்ள கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தும், அதில் அவர் குறிப்பிட்டுள்ள புகார் உண்மையானதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை தொடக்கம்: அதே நேரத்தில் விசாரணை அதிகாரியான மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் தற்கொலை செய்து கொண்ட சுப்ரமணியத்தின் பண்ணை வீட்டில் தோட்டக்காரர் பெருமாள், அவரது மனைவி ரத்தினம், பிற தொழிலாளிகளிடம் முதல்கட்ட விசாரணை நடத்தினார். பின்னர் சுப்ரமணியத்தின் மனைவி சாந்தி, மகன் சபரீஷ், மகள் அபிராமி, மருமகன் அரவிந்த் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.


"தொழில் ரீதியாக நெருக்கடி'

சுப்ரமணியம் எழுதியதாக சிக்கிய கடிதத்தில், நாமக்கல்லைச் சேர்ந்த மற்றொரு பிரபல ஒப்பந்ததாரரின் உறவினர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அவர் சுப்ரமணியத்துக்கு தொழில் ரீதியாக பல்வேறு நெருக்கடி கொடுத்ததுடன், அடியாள்களை வைத்து தாக்க முற்பட்டதாகவும், வருமான வரித் துறை சோதனைக்கு இவர்தான் காரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், அமைச்சர் சி.விஜயபாஸ்கருடன், தனது பெயரை இணைத்து களங்கம் ஏற்படுத்தப்படுகிறது. விசாரணையின்போது வருமானவரித் துறை துணை ஆணையர் ஒருவர், தன்னை அமைச்சரின் பினாமி என்று ஒத்துக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.