/

முறைகேடுகளை தடுக்கவே நீட் தேர்வில் சோதனை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நவீனமாக முறைகேடுகள் நடப்பதை தடுக்கவே நீட் தேர்வில் சோதனைகள் நடைபெற்றது என்றும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

News image
Updated On :11 மே 2017, 5:53 am

DIN

நாகர்கோவில்: நவீனமாக முறைகேடுகள் நடப்பதை தடுக்கவே நீட் தேர்வில் சோதனைகள் நடைபெற்றது என்றும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின்போது கேரள மாநிலம், கண்ணனூரில் மாணவி ஒருவரிடம் நடைபெற்ற கெடுபிடி காரணமாக, பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) ஞாயிற்றுக்கிழமை (மே 7) நடைபெற்றது.

அப்போது, தேர்வு எழுத வந்த மாணவர்களின் முழுக்கை சட்டைகள் கிழிக்கப்பட்டு அரைக்கை சட்டைகளாக்கப்பட்டன. மாணவிகளைப் பொருத்தவரை தாவணி, மூக்குத்தி உள்ளிட்டவற்றை அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில், கேரள மாநிலம், கண்ணனூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் மாணவி ஒருவரிடம் மேல் உள்ளாடையை அகற்றிவிட்டு தேர்வு எழுதுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு, நாடு முழுவதும் பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், மாணவியின் உள்ளாடையை அகற்ற உத்தரவிட்டதாகக் கூறப்படும் 4 ஆசிரியர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வு நடைபெற்ற பள்ளியின் முதல்வர் கே.ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியிடம் ஜமாலுதீன் மன்னிப்புக் கோர வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவர் ஆர்.கே.சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம், கேரள சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை எதிரொலித்தது. கட்சி பேதமில்லாமல் அனைத்து உறுப்பினர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, கண்ணனூரில் மாணவியின் உள்ளாடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மீது கேரள மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும், இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து கண்ணனூர் சம்பவம் தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் செய்தியாளர்களிடையே பேசுகையில், தேர்வில் நடைபெறும் நவீனமாக முறைகேடுகளை தடுக்கவே சோதனைகள் நடைபெற்றதாகவும், ஏற்கனவே, தேர்வு குறித்த விவரங்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் பிறமாநிலங்களுக்கு செல்லும் நிலை நீடித்தால் சென்னைக்கான முக்கியத்துவம் குறையும் என்றும் தமிழகத்துக்கு தொழில் தொடங்க யாரும் வரமாட்டார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.