ஆயுதக் கப்பல் வழக்கில் சிறையில் உள்ள வெளிநாட்டினருக்கு முதல் வகுப்பு கோரி மனு: பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவு

தூத்துக்குடி கடல் பகுதியில் ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் அத்துமீறி நுழைந்த வழக்கில் சிறையில் இருக்கும் வெளிநாட்டினர் இருவரின் முதல் வகுப்பு கோரும் மனுக்களை 2 மாதங்களில் பரிசீலித்து
Updated on
1 min read

தூத்துக்குடி கடல் பகுதியில் ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் அத்துமீறி நுழைந்த வழக்கில் சிறையில் இருக்கும் வெளிநாட்டினர் இருவரின் முதல் வகுப்பு கோரும் மனுக்களை 2 மாதங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகவும், உரிய ஆவணங்கள் இன்றி, ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், சீமேன் கார்டு ஓகியோ எனும் அமெரிக்க கப்பல் கடந்த 2013, அக்டோபரில் கியூ பிரிவு போலீஸாரால் சிறைபிடிக்கப்பட்டது. அதில் பணியாற்றிய 12 இந்தியர்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தண்டனை பெற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் சிம்ப்சன், வில்லியம் இர்விங் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி கடல் எல்லைப் பகுதியில் சீமேன் கார்டு ஓகியோ அமெரிக்க கப்பல் அத்துமீறி நுழைந்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனைவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்.
சிறையில் முதல் வகுப்பு வழங்குவதற்கான தகுதிகள் அனைத்தும் எங்களுக்கு உள்ள நிலையில், அது குறித்து முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. 
எங்களது நாட்டில், நாங்கள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அதிகளவில் வரியும் செலுத்தி வந்துள்ளோம். சிறப்பான கல்வித் தகுதியும் உள்ள நிலையில், தமிழ்நாடு கைதிகள் சட்டம் 227-இன் படி முதல் வகுப்பு அளிக்கலாம். 
எனவே மனுவை பரிசீலித்து முதல் வகுப்பு வழங்க சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். 
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்து 2 மாதங்களுக்குள் உரிய முடிவெடுக்குமாறு தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com