பழனிசாமியே முதல்வராக தொடருவார்; அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம்: தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக முதல்வராக பழனிசாமியின் தலைமையை ஏற்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சென்னை: தமிழக முதல்வராக பழனிசாமியின் தலைமையை ஏற்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 105 முதல் 110 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரியாக எந்த எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறித்த உறுதியான தகவல் கிடைக்கப்பெறவில்லை. பங்கேற்ற அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமித்து ஆதரவு அளித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
திண்டுக்கல் சீனிவாசன் கொண்டு வந்த தீர்மானத்தில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியே தொடருவார். முதல்வர் பழனிசாமி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கூறப்பட்டிருந்தது. இதற்கு எம்எல்ஏக்கள் ஒருமித்து ஆதரவு அளித்தனர்.
முதல்வரை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு கொடுத்த நிலையில் அதற்கு பதிலடியாக, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தி, அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 110 எம்எல்ஏக்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்எல்ஏ சந்திரபிரபா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
அதிமுகவில் தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேர் முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால், இது அதிமுகவின் உள்கட்சிப் பிரச்னை என ஆளுநர் கூறினார். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவரை தில்லியில் சந்தித்து முறையிட்டுள்ளனர்.
இதற்கிடையே, அதிமுகவின் பொதுக் குழு கூட்டத்தை செப்டம்பர் 12-ஆம் தேதி கூட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால், "அதிமுகவின் பொதுக்குழுவை கூட்ட பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தவர்கள் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுக்குழுவில் கலந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்" என டிடிவி தினகரன் எச்சரித்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் 5-ஆம் தேதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க, தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.
செப்டம்பர் 12-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...