பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அரசு கொள்கை முடிவுகள் எடுக்கக் கூடாது

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அரசு கொள்கை முடிவுகள் எடுக்கக் கூடாது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்று திமுக செயல்தலைவர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, 19 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ஆம் தேதியிலிருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துவிட்டது.
ஆனால், இந்த அரசை நீடிக்க வைப்பதற்கு மத்திய அரசும், தமிழக ஆளுநரும் நீண்ட அமைதி காப்பது அரசியல் சட்ட விரோதம். குடியரசுத் தலைவரிடம் மனு அளித்த பிறகும் இந்த அரசு நீடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் செய்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியே கூட்டிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் 109 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதன்மூலம், பெரும்பான்மைக்குத் தேவையான 118 உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் இந்த அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர், அனைத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் முதல்வரை ஆதரிக்க வேண்டியதில்லை. சிலர் ஆதரவு தெரிவிக்காமல் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பெரும்பான்மை இல்லை என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பே
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
மேலும் இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அமைச்சர்களோ அல்லது முதல்வரோ கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கோ அல்லது கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு உதவி செய்வதற்கோ, தலைமைச் செயலர் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது. அது அரசியல் சட்டத்துக்கு விரோதமான செயலாகும். எனவே, தலைமைச் செயலர் எக்காரணத்தைக் கொண்டும் அதற்கு துணை போகக் கூடாது என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com