

ஒடிஸாவைச் சேர்ந்த தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் ரஞ்சன் மொகந்தி திடீரென திங்கள்கிழமை (ஏப்.30) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 1958-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி ஒடிஸா மாநிலம் புரியில் பிறந்தவர், அசோக் ரஞ்சன் மொகந்தி. கடந்த 1985-ஆம் ஆண்டு செப். 20-இல் தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பொறுப்பேற்றார்.
விருதுநகர் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். பழனி தண்டாயுதபாணி கோயில் சிறப்பு அலுவலர், கடலூர் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக இயக்குநர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர், பல்வேறு காலகட்டங்களில் வணிக வரிகள், தொழில் துறை, வேளாண்மை ஆகிய துறைகளின் கூடுதல் செயலாளர், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
மும்பையில் மரணம்: தமிழகத்தின் தொல்லியல் துறை முன்னாள் ஆணையாளராக இருந்தார்.
மும்பையில் இருந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திங்கள்கிழமை காலையில் அவர் காலமானார்.
முதல்வர் பழனிசாமி இரங்கல்: அசோக் ரஞ்சன் மொகந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது மனைவி சபிதா மிஸ்ராவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பிய இரங்கல் கடித விவரம்: தங்களது கணவரின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இதுபோன்ற சூழ்நிலையில் தங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.
தங்களுக்கும், தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இரங்கலை பகிர்ந்து கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழக அரசு தனது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவரை இழந்து விட்டது எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.