முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்துக் கொள்ள விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அதில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை மேற்பார்வையிட தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், மருத்துவர்களின் விவரங்கள் அடங்கிய சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் அண்மையில் தாக்கல் செய்தது. அதேபோல், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்பான ஆவணங்களையும் தமிழக அரசும் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த ஆவணங்களையும், மருத்துவர்களின் சாட்சியங்களையும் சரிபார்த்து ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய ஆணையத்துக்கென தனி மருத்துவர் குழுவை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி கோரிக்கை வைத்திருந்தார்.
தமிழக அரசு அனுமதி: இதை பரிசீலித்த தமிழக அரசு, மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்திக் கொள்ள ஆணையத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவக் குழுவில் 4 மருத்துவர்கள் இடம்பெறுவர் என்றும், அவர்கள் யார் என்பதையும் நீதிபதி ஆறுமுகசாமி முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் குழு ஆணையத்தின் விசாரணை முடிவடையும் வரை செயல்படும் என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக நீதிபதியின் சந்தேகங்களுக்கு ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்து இந்தக் குழு பதில் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.