/

தமிழகத்தில் 2000 மெகாவாட் மின்சாரம் பற்றாகுறை: சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன்

தமிழகத்தில் தற்போது 2,000 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பராமரிப்புப் பணி என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடங்கியுள்ளது

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 8:10 pm

DIN

தமிழகத்தில் தற்போது 2,000 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பராமரிப்புப் பணி என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடங்கியுள்ளது என்று மின்சார வாரிய சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறினார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது:
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநில செயற்குழு கூட்டம், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடையத் தொடங்கியுள்ளதால், மின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப மின் உற்பத்தி இல்லாததால் சுமார் 2,000 மெகாவாட் அளவுக்கு மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பராமரிப்புப் பணி என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை இல்லை என்றும், தேவையான அளவுக்கு மின் உற்பத்தி நடப்பதாகவும் மின் துறை அமைச்சர் கூறுகிறார். அதில் உண்மை இல்லை. எனவே அனைத்து அனல் மின் நிலையங்களிலும் முழு திறனில் உற்பத்தி செய்ய மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வும் பணி நிரந்தரமும் வழங்க வலியுறுத்தி வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய அனல் மின் நிலையங்களில் வரும் மே 22-ஆம் தேதி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிடில், ஜூன் 27-ஆம் தேதி உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மின் விநியோக பிரிவு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்க வேண்டிய ரூ.380 ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நீதிமன்றம் செல்லவும், ஜூன் மாதத்தில் குடும்பத்தோடு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்வாரிய பகுதிநேர ஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோரி மண்டல ரீதியாக போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மின்சார பொதுத் துறையைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது என்றார் எஸ்.எஸ்.சுப்பிரமணியன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.