மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

தங்கம் கடத்தும் குருவிகள்: திருச்சி சுங்கத் துறை அதிகாரிகளைப் பிடிக்க சிபிஐ செய்த தந்திரம்

திருச்சி விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 3:08 pm IST


திருச்சி விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதை விடவும், இந்த கடத்தலுக்கு சுங்கத் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதை உறுதி செய்யவே சிபிஐயின் நேற்றைய சோதனை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

சுங்கத் துறை அதிகாரிகளை கிட்டத்தட்ட கையும் களவுமாக பிடித்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு விமான நிலையத்திற்கு 3 கார்களில் வந்த அதிகாரிகள் குழு விமான நிலைய சுங்கத்துறை பகுதிக்குள் நுழைந்தனர். வனத்துறை அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் என பலரும் நினைத்திருந்த நிலையில், சிறிது நேரத்துக்கு பின்னர் தான், வந்திருந்தது சிபிஐ அதிகாரிகள் என்பது அங்கிருந்தவர்களுக்கு தெரியவந்தது. 

அப்போது, சிங்கப்பூர் விமானத்தில் வந்த பயணிகள் சோதனைகள் முடித்து வெளியே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் சிபிஐ அதிகாரிகள் உள்ளே அழைத்துச் சென்றனர்.  அதாவது, சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் தங்களது உடைமைகளை பரிசோதனை செய்துகொண்டு வெளியே வந்த பிறகு அவர்களைப் பிடித்து விமான நிலையத்துக்குள் கொண்டு சென்றனர்.

அப்போது அவர்களது உடைமைகளையும் சோதித்தனர். அதில் வெளிநாட்டு மதுபானங்கள், விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் இருந்ததை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதன் மூலம், பரிசோதனையை வெறும் கண்துடைப்புக்காக செய்துவிட்டு தங்கக் கடத்தலுக்கு சுங்கத் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை முடிந்து வெளியே வரும் வரை காத்திருந்த சிபிஐ அதிகாரிகள் சரியான நேரத்துக்குள் உள்ளே நுழைந்து சுங்கத் துறை அதிகாரிகளின் முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள், பயணிகள் போர்வையில் இருந்த வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் இன்று மாலை வரை சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டது.  சுமார் 23 மணி நேர சோதனையின் ஒரு பகுதியாக சுங்கத் துறை உதவி ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர்கள் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 

துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஆய்வாளர்கள் 3 பேர் உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டது. கடத்தல் சம்பவங்களில் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா அல்லது வியாபாரிகள் சிலர் பயணிகள் போர்வையில் கடத்தல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் அடிக்கடி விமானத்தில் பயணித்த 8 பெண்கள் உட்பட 29 பயணிகளை மட்டும் விசாரணைக்காக விமான நிலையத்திலேயே வைத்துக் கொண்ட சிபிஐ மற்ற பயணிகளை விடுவித்தது.

தங்கக் கடத்தலில் ஈடுபடும் குருவிகள்

வெறும் பணத்துக்காக தங்கத்தை கடத்தி வரும் தொழிலில் ஈடுபடுவோரை குருவிகள் என்று கூறுகிறார்கள். அதாவது ஓரிடத்தில் இருந்து தங்கத்தைக் கடத்திக் கொண்டு வந்து மற்றொருவரிடம் கொடுப்பதற்காக இவர்களுக்கு கூலி மட்டுமே வழங்கப்படும்.

வேலையில்லாத இளைஞர்களும், தைரியமான இளைஞர்களும் இதுபோன்ற குருவிகள் பணியை செய்கிறார்கள். இவர்களது வேலையே தங்கத்தைக் கடத்தி வருவதாக மட்டுமே இருக்கிறது. ஒருவேளை சுங்கத் துறையில் சிக்கிக் கொண்டால் இவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகும். பல லட்சம் அபராதம் செலுத்தி பாஸ்போர்ட்டை பெற வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

தங்கம் கடத்தும் கும்பல்களுக்குள் ஏற்படும் மோதல்களின் போது ஒரு கும்பல் மற்றொரு கும்பலை போட்டுக் கொடுப்பதால்தான் அவ்வப்போது தங்கம் பிடிபட்டது போன்ற செய்திகளை நாம் படிக்க நேரிடுகிறது.

இதுபோன்ற தங்கக் கடத்தல் சம்பவங்களில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக எழுந்த புகார் குறித்து சிபிஐ நடத்திய அதிரடி சோதனையின் மூலம் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.