வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அமமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான டி.டி.வி.தினகரன்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கட்சியின் மாவட்ட கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவி வழங்கும் விழாவில் பேசியது: 30 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு தாயாக, தோழியாக, சகோதரியாக இருந்த சசிகலா கட்சியையும் ஆட்சியையும் பாதுகாத்து தந்ததுடன் அவர்களால் முதல்வர், அமைச்சர் பதவியை பெற்றவர்கள் இன்று அவருக்கு எதிராக அநீதியாக நடந்துகொண்டு துரோகம் இழைத்து வருகிறார்கள். இதை ஜனநாய முறையில் சந்தித்து தியாகத்துக்கு அங்கீகாரம் பெற்றுதர அமமுக பாடுபட்டு வருகிறது. எந்த எழுச்சியுடன் அதிமுக தொடங்கப்பட்டதோ, அதே எழுச்சி 40 ஆண்டுகளுக்குப் பிறகு அமமுக தொடங்கப்பட்டுள்ளது. அன்று எப்படி வரலாறு காணாத வெற்றியை எம்ஜிஆர் பெற்றாரோ, அதேபோல், வரும் சட்டப் பேரவை தேர்தலில் 200 இடங்களில் அமமுக வெற்றி வாகை சூடும்.
தமிழகத்தில் தற்போது, பொது விநியோகத் திட்ட பருப்பு கொள்முதல் செய்வதிலிருந்து சாலைப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்குவது வரை அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு எதிராக உறவினர்களுக்கு அரசின் திட்டப் பணிக்கான ஒப்பந்தங்களை வழங்கி வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டத்தில் நீர்நிலை தூர்வாரும் பணிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்த ரூ. 400 கோடியில் வெறும் நான்கு கோடி அளவில் மட்டுமே செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், மீதித்தொகையை அமைச்சர்கள் சுருட்டி விட்டதாக தெரிய வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரவுள்ளது. அவர்கள் மீண்டும் சட்டப் பேரவைக்கு செல்வார்கள், ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதன் மூலம் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவார்கள். அப்போது, அமைச்சர்கள் அனைவரும் கைதாகி தமிழகத்திலுள்ள சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்பது உறுதி.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி அங்கு நடைமுறைப்படுத்தியது. இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை வைத்திருத்தார். இன்று தமிழ்நாட்டில் இருப்பது மத்திய அரசுக்கு சலாம் போடும் அடிமை அதிமுக ஆட்சியாக இருக்கிறது.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், ஆளும் கட்சியினர் ஓட்டுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கினாலும், அமமுக மக்கள் செல்வாக்குடன் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும். அடுத்த ஆண்டு வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் அமையும். அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக அமமுக இருக்கும். காவிரி டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்க இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. டெல்டா மாவட்டங்களில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் மட்டுமே அமைக்க வேண்டும். இதற்கு அமமுக துணையாக இருக்கும் என்றார்.
விழாவில், சுயதொழில் செய்பவர்கள், பெண்கள் என 5 ஆயிரம் பேருக்கு, குக்கர், தையல் இயந்திரம், சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்டங்களை தினகரன் வழங்கினார். அவருக்கு மாவட்ட கழகம் சார்பில் வெள்ளி வீரவாள் பரிசு வழங்கப்பட்டது.
கட்சியின் பொருளாளர் எம். ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்டச் செயலர்கள் எஸ். காமராஜ் (திருவாரூர்) மா. சேகர் (தஞ்சை) ஆர். சந்திரமோகன் (நாகை) முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, வளர்மதிஜெபராஜ், திரைப்பட நடிகை சி.ஆர். சரஸ்வதி, வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலர் கு. சீனிவாசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










