தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி புதுப்பித்தல் தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சிலின் கடிதத்துக்கு தமிழக அரசு 8 வார காலத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் பாடம் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்களை, பேராசிரியர்களாக காண்பித்து மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு விளக்கம் அளிக்கக் கோரி இந்திய மருத்துவக் கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக அரசு முறைகேடாக அனுமதியைப் புதுப்பித்திருப்பதால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, அனுமதியை புதுப்பித்து வழங்கிய நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்துக்கு தமிழக அரசு 8 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும். தமிழக அரசு அளிக்கும் பதிலின் அடிப்படையில் இந்திய மருத்துவக் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.