வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் முக்கிய அணைகள் நிரம்பி உபரி நீர் பெரும் அளவில் திறந்துவிடப்படுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி வெள்ளப் பாதிப்பைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
முதல்வர் அறிவுறுத்தல்: வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது, விவசாயிகள் தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
நிவாரண முகாம்களில்...: மழை பாதித்த பகுதிகளில், நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், கழிப்பிட வசதி, போர்வைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்தப் பணிகளை சரியான முறையில் கண்காணிக்க மையம் தோறும் ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
முகாம்களில் 2,538 பேர்: இதுவரை நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், திருச்சி, தருமபுரி மாவட்டங்களில் இருந்து 2,538 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 35 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையில் இருந்து 492 பேர் காவிரி ஆற்றுப் படுகைகளில் உள்ள மாவட்டங்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
துணை ஆட்சியர் குழு: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யும் எனவும், மீனவர்கள் யாரும் வங்காள விரிகுடாவின் மத்திய மற்றும் வடபகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் அதிகமாக வருவதால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட துணை ஆட்சியர் நிலையில் குழுக்கள் அமைக்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மீட்பு-நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்.