புது தில்லி: நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் குளறுபடியின் காரணமாக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தவறான மொழிபெயர்ப்புடன் கேட்கப்பட்டிருந்த 49 கேள்விகளுக்கும் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மொழி மாற்றத்தில் தவறு நிகழ்ந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் ஒவ்வொருவருக்கும் 196 மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையில் இரு வாரங்களுக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும். அதுவரை தற்போதைய தரவரிசைப் பட்டியலையும், கலந்தாய்வையும் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தது.
இந்த வழக்கு தொடர்பாக டி.கே. ரங்கராஜன் எம்.பி. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அடுத்த நாளே கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீட் மூலம் எம்.பி.பி.எஸ் இடத்திற்கு தேர்வாகியுள்ள தமிழக மாணவர் சத்யா என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஜூலை 20-ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் டி.கே. ரங்கராஜன் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சித்தார்த் லூத்ரா, என்ஜிஆர் பிரசாத் ஆகியோர் ஆஜராகி,மொழிபெயர்ப்பு காரணமாக தவறாகக் கேட்கப்பட்டிருந்த 49 கேள்விகளால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனவே, இந்தக் கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்' என்றனர்.
அப்போது குறுகிட்ட நீதிபதி எல். நாகேஸ்வர ராவ், நீட் தேர்வு என்பது அகில இந்திய அளவில் நடத்தப்படுவதாகும். வினாத்தாளின் மொழிப்பெயர்ப்பு சரியாக இருந்திருக்கும் பட்சத்திலும், மாணவர்கள் தவறான விடையை அளித்திருக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டால் திறமையான மாணவர்கள் நிலை என்னவாகும்?' என்றார்.
இதற்கு சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங், நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில், மாநில அரசால் அளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் செய்த தவறுக்கு சிபிஎஸ்இ மீது குற்றம்சாட்டி வருகின்றனர். நீட் தேர்வை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில், வினாத்தாள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
வினாத்தாளில் குழப்பம் ஏற்படும் பட்சத்தில் ஆங்கில மொழியில் கேட்கப்பட்ட வினாக்களையே இறுதியாகக் கொள்ள வேண்டும். 196 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டால் சில மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களையும் விஞ்சும் நிலை ஏற்படும். மேலும், மாணவர்கள் மத்தியில் பாகுபாடு உருவாகவும் வழிவகுக்கும். குழப்பமான நிலை உருவாகும்' என்றார்.
பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது. நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் எதிர்காலத்தில் தவறு நேராத வகையில் இருப்பதற்கான தீர்வுகளை சிபிஎஸ்இ உள்ளிட்ட மனுதாரர்கள் மேற்கொள்ள வேண்டும். வழக்கு 2 வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கினை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் குளறுபடியின் காரணமாக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கானது வியாழனன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாணவர்கள் தங்களது மாநில மொழியில் படிப்பது என்பது சரி; ஆனால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் முக்கியம். +2 மாணவர்கள் அடிப்படை ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் முக்கியம். மருத்துவ படிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் பயிற்றுவிக்கப் படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.
வாதங்களுக்குப் பிறகு பின்னர் நீதிமன்றம் தெரிவித்ததாவது:
நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடியின் காரணமாக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட இயலாது. தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு இம்முறை நிவாரணம் எதுவும் அளிக்க வாய்ப்பு கிடையாது. நீட் தேர்வுக்கும், மருத்துவப் படிப்புக்கும் ஆங்கிலம்தான் மிகவும் முக்கியம் என்னும் பட்சத்தில், மாணவர்களுக்கு மாநில மொழியில் தேர்வு நடத்துவது எதனால்? இவற்றை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கினை செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மஹிந்திரா & மஹிந்திரா 4வது காலாண்டு லாபம் 48.5% உயர்வு!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி காலமானார்

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!

சூறையாடப்பட்ட திரிணமூல் அலுவலகம்! பாஜக தொண்டர்கள் அட்டூழியம்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


